பிபா யு-17 உலக கோப்பை இன்று தொடக்கம் ரசித்து விளையாடுங்கள் கனவுகளை துரத்துங்கள்: இந்திய வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிபா யு17 உலக கோப்பை இன்று தொடக்கம் ரசித்து விளையாடுங்கள் கனவுகளை துரத்துங்கள்: இந்திய வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து

புது டெல்லி: பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடங்கி, 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுவதாலும், பிபா நடத்தும் எந்த ஒரு வயது பிரிவினருக்குமான உலக கோப்பை தொடரிலும் இந்தியா முதல் முறையாக பங்கேற்பதாலும், ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முதல் நாளான இன்று 4 போட்டிகள் நடைபெறுகின்றன. புது டெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில், மாலை 5 மணிக்கு நடைபெறும் போட்டியில், கொலம்பியா-கானா அணிகளும், இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில், இந்தியா-அமெரிக்கா அணிகளும் மோதுகின்றன.   முன்னதாக நவி மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில், மாலை 5 மணிக்கு நடைபெறும் போட்டியில், நியூசிலாந்து-துருக்கி அணிகளும், இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில், பராகுவே-மாலி அணிகளும் மோதுகின்றன.

யு-17 உலக கோப்பை தொடர்களில் பொதுவாக தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. தொடக்க விழாவுக்கான பணத்தை, விளையாட்டின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தும்படி பிபா கூறியுள்ளது.

எனினும் புது டெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில், சிறிய அளவிலான தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

முதல் போட்டியை காண வேண்டும் என பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டியதால்தான், இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் நவி மும்பையில் இருந்து புது டெல்லிக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் 12 பேரை பிரதமர் மோடி கவுரவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இந்திய யு-17 அணி வீரர்களுக்கும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவிக்கவுள்ளார். புது ெடல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில், சுமார் 60 ஆயிரம் பேர் வரை அமர்ந்து போட்டியை கண்டு களிக்க முடியும்.

பிரதமர் மோடி வருவதால், மைதானம் காலியாக இருப்பதை விளையாட்டு அமைச்சகம் விரும்பவில்லை. எனவே உள்ளூர் போட்டி ஏற்பாட்டு குழு 26,750 டிக்கெட்களை, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு இலவசமாக வழங்கியுள்ளது.

தேர்ந்து எடுக்கப்பட்ட பள்ளிகள், என்ஜிஓக்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு அவற்றை மத்திய விளையாட்டு அமைச்சகமும் இலவசமாக வினியோகம் செய்துள்ளது. இந்திய யு-17 அணிக்கு, நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘’உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய யு-17 அணிக்கு வாழ்த்துக்கள். உங்கள் (இந்திய வீரர்கள்) போட்டிகளை ரசித்து விளையாடுங்கள்.

கனவுகளை துரத்துங்கள். ஏனெனில் கனவுகள் உண்மையாக மாறும்’’ என கூறியுள்ளார்.

அமெரிக்கா வலுவான அணி என்றாலும், சொந்த மண் என்பதால், இந்தியா கடுமையான சவாலை அளிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.


.

மூலக்கதை