ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வியை மறந்துவிட்டு டி20 போட்டிகளில் புத்துணர்ச்சியுடன் விளையாடுவோம் : ஆஸ்திரேலிய வீரர் ஹென்ரிக்ஸ் உற்சாகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வியை மறந்துவிட்டு டி20 போட்டிகளில் புத்துணர்ச்சியுடன் விளையாடுவோம் : ஆஸ்திரேலிய வீரர் ஹென்ரிக்ஸ் உற்சாகம்

ராஞ்சி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒரு நாள் தொடரை 4-1 என இந்தியா அபாரமாக கைப்பற்றியது.

இதன்பின் இரு அணிகள் இடையே 3 டி20  போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் கூறுகையில்,  ‘’ஒரு நாள் தொடரில் அடைந்த படு தோல்வியை மறந்து விட்டு, டி20 தொடரில் புத்துணர்ச்சியுடன் விளையாடுவோம். ஆஸ்திரேலிய வீரர்கள் மன நிலையை மாற்றி கொண்டு விளையாடுவது நல்லது’’ என்றார்.

டி20  தொடருக்காக 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10 வீரர்கள், இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடியவர்கள்.

ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ்  ஸ்மித்தும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னரும் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் காஸ்பரோவிச், ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் பெற்ற அனுபவம் இந்த தொடரில் முக்கிய பங்காற்றும் என்றார்.

அவர் மேலும்  கூறுகையில், ‘’சொந்த மண்ணை விட்டு விட்டு வேறு ஒரு நாட்டில் கிரிக்கெட் விளையாடுவது எப்போதுமே கடினமானது. அதிலும் இந்தியாவில் உள்ள சூழ்நிலைகளில் விளையாடுவது சவாலானது.

ஆஸ்திரேலிய வீரர்கள்  அதைதான் எதிர்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியில் உள்ள இளம் வீரர்கள் இந்தியாவில் விளையாடுகையில் இன்னும் நிறைய விஷயங்களை கற்று கொள்ள முடியும்.

ஐபிஎல்லில் பெற்ற அனுபவத்தை வைத்து  கொண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் முன்னோக்கி செல்ல வேண்டும்’’ என்றார்.

.

மூலக்கதை