பிபா யு-17 உலக கோப்பை நாளை தொடக்கம் : இந்திய அணி சிறப்பாக செயல்படும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிபா யு17 உலக கோப்பை நாளை தொடக்கம் : இந்திய அணி சிறப்பாக செயல்படும்

நவி மும்பை: கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, பிபா யு-17 உலக கோப்பை தொடர், இந்தியாவில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. முதல் முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த  கால்பந்து திருவிழா வரும் 28ம் தேதி நிறைவடைகிறது.

பிபா நடத்தும் எந்த ஒரு வயது பிரிவினருக்குமான உலக கோப்பையிலும் இந்தியா களமிறங்குவது இதுவே முதல் முறை என்பதால், எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி  கிடக்கிறது. கொல்கத்தா, கொச்சி, புது டெல்லி, நவி மும்பை, கவுகாத்தி, மார்கோ உள்ளிட்ட 6 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. அவை தலா 4 அணிகள் வீதம் 6 பிரிவுகளாக  பிரிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, கொலம்பியா, கானா உள்ளிட்ட அணிகள் அடங்கிய ‘ஏ’ பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

முதல் நாளான நாளை 4 போட்டிகள் நடைபெறுகின்றன.

நவி மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டீஸ் ஸ்டேடியத்தில், நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், நியூசிலாந்து-துருக்கி அணிகள் (பி  பிரிவு)பலப்பரீட்சை நடத்துகின்றன. அதே 5 மணிக்கு, புது டெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில், கொலம்பியா-கானா அணிகள் (ஏ பிரிவு) மோதுகின்றன.

புது டெல்லி ஜவகர்லால் நேரு  ஸ்டேடியத்தில், நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில், இந்தியா-அமெரிக்கா அணிகள் (ஏ பிரிவு) பலப்பரீட்சை நடத்துகின்றன.

அதே 8 மணிக்கு, நவி மும்பை டாக்டர் டிஒய் பாட்டீஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில், பராகுவே-மாலி அணிகள் மோதுகின்றன.

இது குறித்து இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் விஜயன் கூறுகையில்,  ‘’இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இந்திய அணியின் வீரர்கள் என்னை அதிகம் ஈர்த்துள்ளனர்.

உலக கோப்பையில் ஒரு நம்பகமான செயல்பாட்டை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று  என்னால் கூற முடியும். இந்திய அணியிடம் தரமும், சாதிக்க வேண்டும் என்ற உறுதியும் காணப்படுகிறது’’ என்றார்.

1989-2003க்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவுக்காக 79 போட்டிகளில் விஜயன் விளையாடியுள்ளார்.

.

மூலக்கதை