அமெரிக்க துப்பாக்கி சூடு பலி 60 ஆக உயர்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்க துப்பாக்கி சூடு பலி 60 ஆக உயர்வு

லாஸ்வேகாஸ்:  அமெரிக்காவில் சூதாட்டம், கேளிக்கைக்கு பேர்போன நகரம் லாஸ் வேகாஸ். இங்குள்ள லாஸ் வேகாஸ் ஸ்டிரிப் சாலையில் உள்ள ரூட் 91  ஹர்வெஸ்ட் என்ற திறந்தவெளி கூடத்தில் 3 நாள் நாட்டுப்புற இசை திருவிழா நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது.

உள்நாட்டு நேரப்படி  இரவு 10 மணி அளவில் ஜேசன் அல்டீனின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. 22,000 பேர் ஆட்டம், பாட்டத்துடன் இசை நிகழ்ச்சியை ரசித்துக்  கொண்டிருந்த சமயத்தில் திடீரென துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டது.

மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கி குண்டுகள் சரமாரியாக பாய்ந்தன. சுதாரித்து  ஓடுவதற்குள் பலர் குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாயினர்.



இந்த பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் பலியாகினர். 400 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த அதிரடிப்படையினரும், போலீசாரும் விரைந்து வந்து மக்களை  பத்திரமாக வெளியேற்றினர். இசை நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு எதிரே இருந்த மாண்டலே பே என்ற ஓட்டலிலிருந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடுவதை  கண்டுபிடித்த போலீசார் அங்கு அதிரடியாக புகுந்தனர்.

அந்த ஓட்டலின் 32வது மாடியில் உள்ள ஒரு அறையில் பதுங்கியிருந்தபடி மர்ம நபர், ரசிகர்கள்  கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார். அதிரடிப்படையினர் அந்த அறைக்கு சென்றபோது, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்டவர் ஸ்டீபன் பேட்காக் என்றும், லாஸ் வேகாஸ் அருகில் உள்ள நவேடா  மாநிலத்தை சேர்ந்த மெஸ்குயிட் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.   அந்த அறையில் 10 நவீன ரக இயந்திர துப்பாக்கிகள் இருந்ததை போலீசார்  பறிமுதல் செய்தனர்.

.

மூலக்கதை