சென்னையில் சீமானை சந்தித்த இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா!

என் தமிழ்  என் தமிழ்
சென்னையில் சீமானை சந்தித்த இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இன்று இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா சென்னையில் சந்தித்தார்.இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா, தனது காதலர் தேஸ்மந்த் கொட்டின்கோ-வை திருமணம் செய்துகொள்வதற்காக, கடந்த ஜூலை 12-ம் தேதி கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இவர்களது மனு, சார்பதிவாளர் அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டது.

இந்தியத் திருமணச் சட்டப்படி, ‘மனுதாரரின் திருமணத்தில் ஆட்சேபனை இருப்பவர்கள் 30 நாள்களுக்குள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்’ என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இரோம் சர்மிளா மனு செய்த அடுத்த நாளே, கொடைக்கானல் பேத்துப்பாறையைச் சேர்ந்த தே.மு.தி.க பிரமுகரான மகேந்திரன், இவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மனு ஒன்றை அளித்தார்.

இதைத் தொடர்ந்து, இரோம் சர்மிளா – தேஸ்மந்த் கொட்டின்கோ திருமணம் இங்கே நடைபெற்றால், கொடைக்கானல் போர்க்களமாகிவிடும். அதன்மூலம், கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது எனத் தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் மீறி அவர்களின் திருமணம் கொடைக்கானலில் நடந்தது. இந்நிலையில், இரோம் சர்மிளா தனது கணவருடன் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்துப் பேசியுள்ளார்.

கொடைக்கானலில் முகாமிட்டிருந்த இரோம் சர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்த பல அமைப்புகளில் நாம் தமிழர் கட்சியும் ஒன்று. எனவே, அதற்கு மரியாதை கொடுக்கும் வகையில்தான் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், சந்திப்பின்போது நடப்பு அரசியல் குறித்து சீமானும் சர்மிளாவும் விரிவாக உரையாடியதாக நாம் தமிழர் கட்சியின் நெருக்கிய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

மூலக்கதை