எனது உரையாடல் உள்பட எதிர்கட்சி தலைவர்களின் தொலைபேசி ஒட்டு கேட்பு : கர்நாடக முதல்வர் பகீர் குற்றச்சாட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
எனது உரையாடல் உள்பட எதிர்கட்சி தலைவர்களின் தொலைபேசி ஒட்டு கேட்பு : கர்நாடக முதல்வர் பகீர் குற்றச்சாட்டு

பெங்களூரு : எனது உரையாடல் உள்பட எதிர்கட்சி தலைவர்களின் தொலைபேசி பேச்சுகள் ஒட்டு கேட்கப்படுகின்றன என கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா பகீர் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.

இதனால் அங்கு ஆளும் மற்றும் கட்சியினரிடையே பகீர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்த சூழலில் எதிர்கட்சி தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ளன. அண்மையில் பெங்களூருவில் நடைபெற்ற பாஜ கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் அசோக் பேசுகையில், உளவுத்துறையை பயன்படுத்தி பாஜ தலைவர்களின் பேச்சுகளை கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா ஒட்டு கேட்டு வருகிறார்.

இதன் மூலம் பாஜவினரின் வியூகங்களை அறிந்து அதற்கு ஏற்ப காங்கிரஸ் செயல்பாடுகளை செய்ய திட்டமிட்டு வருகிறார். இதற்கான ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன் என்றார்.

ஆனால் இதை முதல்வர் சித்தராமைய்யா வன்மையாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் யாருடைய தொலைபேசி உரையாடலையும் ஒட்டு கேட்கவில்லை. எதிர்கட்சி தலைவர்களின் பேச்சுகளை ஒட்டு கேட்கும் வகையில் காங்கிரஸ் மலிந்து விடவில்லை.

அசோக்கின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. மத்திய அரசுதான் எதிர்கட்சி தலைவர்களின் உரையாடலை ஒட்டு கேட்கிறது.

ஏற்கனவே இது போன்ற குற்றச்சாட்டுகள் மத்திய அரசுக்கு எதிராக எழுந்தன. எனது பேச்சு உள்பட காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுகள் ஒட்டு கேட்கப்படுகின்றன.

பாஜ ஒட்டு கேட்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான். எனவே தான் அது குறித்த பேச்சுகளை யாரும் வெளிப்படையாக பேசுவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த குற்றசாட்டுகளை கர்நாடக போலீஸ் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டியும் கூறினார். அவர் கூறுகையில், அமைச்சர்கள் உள்பட 35 தலைவர்களின் தொலைபேசி பேச்சுகளை மத்திய அரசு ஒட்டு கேட்டு வருகிறது.

அதே போல காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவற்றையும் மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது என்றார்.

.

மூலக்கதை