கரூரில் செந்தில் பாலாஜி உறவினர்களின் வீடு, நிறுவனங்களில் 2ம் நாளாக ரெய்டு : மருத்துவ கல்லூரி விவகாரம் காரணமா? பரபரப்பு தகவல்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கரூரில் செந்தில் பாலாஜி உறவினர்களின் வீடு, நிறுவனங்களில் 2ம் நாளாக ரெய்டு : மருத்துவ கல்லூரி விவகாரம் காரணமா? பரபரப்பு தகவல்கள்

கரூர் : கரூரில் செந்தில் பாலாஜி உறவினர்கள், நண்பர்களின் வீடு, நிறுவனங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.

டிடிவி தினகரன் அணியில் முக்கியமானவராக உள்ளார். 18 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சேர்ந்து, கர்நாடக மாநிலம் குடகில் தங்கி உள்ளார்.

செந்தில்பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது  வேலை வாங்கித்தருவதாக ரூ. 4. 25 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில்  தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து அறிவித்ததையடுத்து இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது.

செந்தில்பாலாஜியை தேடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் குடகு சென்றனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அவர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே கரூரில் உள்ள செந்தில்பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

செங்குந்தபுரம், ராமகிருஷ்ணபுரம், ராமகிருஷ்ணபுரம் வடக்கு, ராம்நகர், ராயனூர், வெங்கமேடு ஆகிய பகுதிகளில் 13 இடங்களில் உள்ள டெக்ஸ்டைல்ஸ், சாயம் மற்றும் சலவை ஆலை, அபார்ட்மென்ட் வீடுகளில் இந்த சோதனையை நடத்தினர்.

தியாகராஜன், நவ்ரங் சுப்பிரமணி, கொங்கு சுப்பிரமணி, ஆர்த்தி டெக்ஸ் சாமிநாதன், மனோகரன், செல்வராஜ் ஆகியோரின் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் சோதனை நடைபெற்றது. இதுதவிர கான்ட்ராக்டர்கள் சங்கர், ஆனந்த், முன்னாள் அதிமுக அவைத் தலைவர் தாரணி சரவணன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.

ராமகிருஷ்ணாபுரத்தில் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான டெக்ஸ்டைல் நிறுவனத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத கோடிக்கணக்கிலான பணமும், ஏராளமான ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. 2வது நாளாக இன்றும் நேற்று சோதனை நடத்திய அதே இடங்களில் சோதனை நடந்து வருகிறது.



காரணம் என்ன?

சோதனையில்  சிக்கிய தொழிலதிபர்  தியாகராஜன், செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர்.   கரூர் அருகேயுள்ள வாங்கல்  குப்பிச்சிபாளையத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும்   மருத்துவமனை அமைப்பதற்காக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இடம்  தேர்வு செய்யப்பட்டது. செந்தில்பாலாஜி பதவி பறிக்கப்பட்ட பின்,  கோஷ்டி மோதல் காரணமாக மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை  மருத்துவக்கல்லூரியை சணப்பிரட்டி என்ற இடத்திற்கு மாற்றினார்.   இதனால் கோஷ்டிபூசல் பயங்கரமாக வெடித்தது.

மருத்துவக்கல்லூரி  சணப்பிரட்டியில் அமையக்கூடாது என இந்த தியாகராஜன்தான்  கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். தற்போது அந்த தடைநீக்கப்பட்டு  சணப்பிரட்டியிலேயே மருத்துவக்கல்லூரி அமைக்க கோர்ட்  உத்தரவிட்டுள்ளது.

சோதனையில்  சிக்கிய மற்றவர்களும் மருத்துவக்கல்லூரி வாங்கலில் அமையவேண்டும் என முயற்சி  செய்தவர்கள் தான். எனவே இந்த சோதனைக்கும், மருத்துவ கல்லூரி விவகாரத்துக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.



அதாவது ஒரு இடத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்றால், 20 ஏக்கர் இடம் தேவை. ஒரே இடத்தில் 20 ஏக்கர் இல்லாவிட்டால், இடத்தை மக்கள் தானமாக வழங்கலாம் என மருத்துவதுறை விதியில் உள்ளது.

அந்த விதிப்படி தியாகராஜன், நவ்ரங் சுப்பிரமணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் குப்பிச்சிபாளையத்தில் 20 ஏக்கர் இடத்தை சொந்தமாக வாங்கினர். இந்த 20 ஏக்கர் நிலமும் ஒரே நாளில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் மருத்துவ துறைக்கு தானமாக அளிக்கப்பட்டது. இதில் தான் விவகாரம் அடங்கி உள்ளது.

மருத்துவ கல்லூரிக்கு வாங்கப்பட்ட 20 ஏக்கருடன்,  அதற்கு அருகிலேயே கூடுதலாக 20க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை இவர்கள் குறைந்த விலைக்கு வாங்கி உள்ளனர்.

இந்த இடத்தில் மருத்துவ கல்லூரி வரும்பட்சத்தில், இவர்கள் வாங்கி உள்ள நிலத்தின் மதிப்பு உயரும்.

அதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என திட்டமிட்டுதான் குப்பிச்சிபாளையத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க இவர்கள் போராடி உள்ளனர் என்பது இப்போது தெரியவந்துள்ளது. இதன்அடிப்படையில் தான் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   இதுதவிர இப்போது சோதனைக்கு ஆளாகி உள்ளவர்கள் ஜவுளி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபர்கள்.

இவர்கள் வருமானத்துக்கு முறையாக கணக்கு வைத்திருக்கிறார்களா, வருமானவரி முறையாக கட்டி இருக்கிறார்களா என்பதை கண்டறியவும் இந்த சோதனை நடந்ததாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருச்சியில் விசாரணை

கரூரில் உள்ள ஓட்டலில் இருந்து இன்று காலை அனைத்து அதிகாரிகளும் சோதனைக்கு கிளம்பினர். ஆனால் ஒரே ஒரு கார் மட்டும் திருச்சி நோக்கி சென்றது.

அந்த காரில் நவ்ரங் சுப்பிரமணி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவரை திருச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தலாம் என கூறப்படுகிறது.

.

மூலக்கதை