அவிநாசி அருகே இன்று பயங்கரம் : பாலத்திலிருந்து கார் கவிழ்ந்து 5 பேர் பலி: 10 பேர் படுகாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அவிநாசி அருகே இன்று பயங்கரம் : பாலத்திலிருந்து கார் கவிழ்ந்து 5 பேர் பலி: 10 பேர் படுகாயம்

அவிநாசி : திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தெக்கலூர் பஸ் ஸ்டாப் அருகே கோவை- ஈரோடு தேசிய நெடுஞ்சாலை 6 வழிப்பாதையில் மேம்பாலம் உள்ளது. இப்பாலத்தின் மேல், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து கோவை நோக்கி இன்று காலை 10 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது.

திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் சங்க தலைவர் கந்தசாமி மற்றும் துணைத் தலைவர் இயக்குனர்கள் 3 பேர் மற்றும் டிரைவர் உள்ளிட்ட 7 பேர் காரில் இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத் தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் காரிலிருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். இதில் கந்தசாமி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த டிரைவர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பஸ்சில் வந்த 10 பயணிகள் காயமடைந்தனர்.

இச்சம்பவம் நடந்த இடத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர்.

இறந்த கந்தசாமி நாமக்கல் மாவட்ட அதிமுகவில் முக்கிய பிரமுகர் என்பதால் தகவலறிந்த அதிமுகவினர் ஏராளமானோர்் அப்பகுதியில் குவிந்தனர். விபத்தில் இறந்தவர்கள் தமிழக அமைச்சர் ஒருவருக்கு உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான கார் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.

மற்றவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

.

மூலக்கதை