அதிமுக ஆட்சி கட்டாய திருமணம் 100 நாளில் தேர்தல் வந்தால் அரசியல் களத்தில் இருப்பேன் : கமல்ஹாசன் உறுதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிமுக ஆட்சி கட்டாய திருமணம் 100 நாளில் தேர்தல் வந்தால் அரசியல் களத்தில் இருப்பேன் : கமல்ஹாசன் உறுதி

சென்னை : அதிமுக ஆட்சி கட்டாய திருமணம் போன்றது. மணமகளான மக்கள், இதிலிருந்து விடுபட நினைக்கிறார்கள்.

100 நாளில் தேர்தல் வந்தால் நான் அரசியல் களத்தில் இருப்பேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். இது தொடர்பாக ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி: அதிமுக ஆட்சி கட்டாய திருமணம் போன்றது.

இதில் தமிழக மக்கள்தான் மணமகள். இந்த திருமணத்திலிருந்து எப்படியாவது விடுபட மக்கள் நினைக்கிறார்கள்.

அரசியல் பிரவேசம் என்பது முள்கீரிடம். இடதுசாரியா, வலதுசாரியா அல்லது வேறு சிந்தனை உடையவர்களா என்றெல்லாம் மக்கள் பார்க்கவில்லை.

தங்களது பிரச்னையை யார் போக்குவார்கள் என்றுதான் பார்க்கிறார்கள். அந்த பிரச்னைகளை யாரும் கவனத்தில் கொள்வதில்லை என்பதுதான் அவர்களின் ஏக்கம்.

கறுப்புதான் எனது நிறம். அதில் காவி உள்பட எல்லா நிறங்களுமே அடங்கும்.

அரசியல்வாதியாக மாறும் முன் என்னை நானே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக மக்களை சந்திக்க வேண்டும்.

விரைவில் மக்களை சந்திக்க உள்ளேன். அதற்கான அறிவிப்பு வரும்.

அரசியல் ஒரு சாக்கடை, புதைகுழி என்ற எண்ணங்களை மாற்றி, அது எல்லோருக்குமானது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

உடனடியாக பெரும் மாற்றத்தை செய்துவிடுவேன் என்றெல்லாம் உறுதி தரவில்லை.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற வாதங்களை விட மக்களின் அன்பை நான் மதிக்கிறேன். மக்களுக்கு உதவ எந்த நிலை வரையும் கீழே இறங்க நான் தயார்.

மாற்றத்துக்காக தலை வணங்க தயாராக உள்ளேன். மக்களும் அதிமுக ஆட்சி போக வேண்டும் என விரும்புகிறார்கள்.

100 நாளில் தேர்தல் வந்தால் நான் அரசியல் களத்தில் இருப்பேன். நான்கு வாரங்களுக்கு முன் ரஜினியை சந்தித்தேன்.

அவருக்கும் எனக்கும் ஒரே நோக்கம்தான். அது ஊழலை ஒழிப்பது.

ஆனால் அவரது வழி வேறு. எனது வழி வேறு.

நான் அரசியலுக்கு போகிறேன் என அவரிடம் சொல்லிவிட்டேன். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.

சினிமாவில்தான் நாங்கள் போட்டியாளர்கள். இங்கு இல்லை.

சேற்றை வாரி இறைக்கும் செயலில் நாங்கள் இருவருமே ஈடுபட மாட்டோம். அரசியலில் நல்ல உதாரணங்களை ஏற்படுத்த விரும்புகிறோம்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

.

மூலக்கதை