உலகின் அதிவேக புல்லட் ரயில் சேவை சீனாவில் இன்று துவக்கம்

தினகரன்  தினகரன்

பீஜிங்: உலகின் அதிவேக புல்லட் ரயில் சேவையை சீனா இன்று துவங்குகிறது. பீஜிங்-ஹாங்காங் இடையே இயக்கப்படும் ஃபுக்ஸிங் எனப் பெயர் சூட்டப்பட்ட அதிவேக புல்லட் ரயில் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். பீஜிங் மற்றும் ஹாங்காங் நகரங்களுக்கு இடையே 1302 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் 5 மணி நேரத்துக்குள் கடந்து விடும். சீனாவில் முதல் அதிவேக ரயில் ஆகஸ்ட் 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால் 2011-ம் ஆண்டு இரண்டு ரயில்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, சீன அரசு ரயிலின் வேகத்தை 250-300 ஆக குறைத்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதிவேக புல்லட் ரயிலை அந்நாடு அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயிலில் வைபை உள்ளிட்ட அதிநவீன வசதிகள் உள்ளன. பீஜிங்-ஹாங்காங் இடையே உலக தரத்தில் 24 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர காலங்களில் ரயிலின் வேகம் தானாக குறைந்து, தேவைப்பட்டால் நின்றுவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் வாழ்நாள் 30 ஆண்டுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை தினசரி சுமார் 5,05,000 பேர் பயன்படுத்த உள்ளனர்.

மூலக்கதை