அமெரிக்க தடையால் ஆத்திரம்; டொனால்டு டிரம்ப் மனநலம் குன்றியவர் : கிம் ஜாங் உன் விமர்சனம்

தினகரன்  தினகரன்

பியாங்யாங்: அமெரிக்க அதிபர் பேசுவது நாய் குரைப்பது போன்றது என்று விமர்சித்த வடகொரியா, தற்போது டொனால்டு டிரம்பை மனநலம் குன்றியவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளது. அணு ஆயுத சோதனையை தொடர்வதால் வடகொரியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. திருந்தவில்லை என்றால் வடகொரியா முற்றிலுமாக அழிக்கப்படும் எனவும் அமெரிக்கா மிரட்டியுள்ளது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை மனநலம் குன்றியவர் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் விமர்சித்துள்ளார். இதனிடையே புதிதாக தயாரித்துள்ள ஹைட்ரஜன் குண்டை பசுபிக்கில் சோதித்து பார்க்க உள்ளதாக கூறி வடகொரியா பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியா மீது புதிய தடைகள் விதிக்கப்படுவதாக அறிவித்தார். இதன்படி வர்த்தக உறவுக்கு அமெரிக்க வேண்டுமா? வடகொரியா வேண்டுமா? என உலக நாடுகள் தீர்மானித்து கொள்ளலாம் என்றும் அவர் கெடு விதித்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத வேட்கையை தணிக்க போர் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை