தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் உள்ளார் : சகோதரர் இப்ராகிம் காஸ்கர் கூறியதாக போலீசார் தகவல்

PARIS TAMIL  PARIS TAMIL
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் உள்ளார் : சகோதரர் இப்ராகிம் காஸ்கர் கூறியதாக போலீசார் தகவல்

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் தலைமறைவாக உள்ளார். இவரது தம்பியான இக்பால் இப்ராஹிம் காஸ்கர், தானேவைச் சேர்ந்த கட்டுமானத் தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் பணம் மற்றும் 4 பிளாட்கள் கொடுக்க வேண்டும் என்று தாவூத் பெயரைக் கூறி மிரட்டி உள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் தானே போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் தெற்கு மும்பையில் தனது சகோதரி ஹசீனா பார்க்கரின் வீட்டில் இருந்த இக்பால் இப்ராகிம் காஸ்கரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர் காஸ்கர் கைது செய்யப்பட்டார். காஸ்கர் உட்பட கைது செய்யப்பட்ட 3 பேரையும் 8 நாள் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், விசாரணையின் போது தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் உள்ளார் என்பதை காஸ்கர் ஒப்புக்கொண்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்  நான்கு முதல் ஐந்து முகவரிகளில் வசிப்பதாகவும், போலீசாரால் ஒட்டுகேட்கப்படலாம் என்ற அச்சத்தில் குடும்பத்தினர், உறவினர்கள்  தொலைபேசியில் அழைத்தால் கூட எடுப்பதில்லை என்று காஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தனது மற்றொரு சகோதரரான அனீஸ் அகமதுவுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள காஸ்கர், தாவூத் இப்ராகிமின் நெருக்கமான உதவியாளரான சோட்டா சகீலுடன் தனக்கு நல்லுறவு இல்லை என்றும் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மூலக்கதை