வெள்ள தடுப்பு பணிக்கு நிதியில்லை!: தவிக்கிறது பொதுப்பணி துறை

தினமலர்  தினமலர்
வெள்ள தடுப்பு பணிக்கு நிதியில்லை!: தவிக்கிறது பொதுப்பணி துறை

நீர் வழித்தடங்களில், வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ள, அரசிடம் நிதி உதவியை எதிர்பார்த்து, பொதுப்பணித் துறையினர் காத்திருக்கின்றனர்.

மாநிலம் முழுவதும் உள்ள நீர் வழித்தடங்கள், முறையாக பராமரிக்கப்படாததால், அவற்றில் புதர் மண்டி, அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், இவற்றில் வெள்ள நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும், வெள்ள தடுப்பு நடவடிக்கைக்கு, அரசு சார்பில், 50 கோடி ரூபாய் வரை, நிதி ஒதுக்கப்படும். இதில், சென்னை நீர் வழித்தடங்கள் புனரமைக்கும் பணிக்கு மட்டும், 3.62 கோடி ரூபாய் செலவிடப்படும்.

இந்த நிதியை பயன்படுத்தி, கூவம், அடையாறு, ஆரணியாறு, கொற்றலையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர் வழித்தடங்களில், அடைப்புகள் அகற்றப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், இப்பணிகள் நடக்கும்.

அடுத்த மாதம், வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. இப்போது, நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே, மாநிலம் முழுவதும் பணிகளை விரைந்து முடிக்க முடியும். ஆனால், இப்பணிகளுக்கு, இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால், பருவ மழை நேரத்தில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள், வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசிடம் இருந்து நிதியை எதிர்பார்த்து, பொதுப்பணித் துறையினர் காத்திருக்கின்றனர்.
இது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தாண்டு, சென்னை நீர் வழித்தடங்கள் துார்வாரும் பணிக்கு, ஐந்து கோடி ரூபாயும், மற்ற மாவட்டங்களுக்கு, 80 கோடி ரூபாயும் கேட்கப்பட்டு உள்ளது. இது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது. நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன், பணிகள் விரைவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

மூலக்கதை