இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!

PARIS TAMIL  PARIS TAMIL
இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டால் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் பந்து வீச்சால் இந்தியா 50 ரன்னில் அசத்தல் வெற்றி
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
 
ரகானே (55), விராட் கோலி (92) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 50 ஓவரில் 252 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் கவுல்டர்-நைல், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
 
பின்னர் 253 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு அதிக அளவு ஒத்துழைத்ததை பயன்படுத்தி புவனேஸ்வர் குமார் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். யார்க்கர் மன்னன் பும்ரா சரியாக பந்து வீசவில்லை. இதை புவனேஸ்வர் குமார் சமாளித்துக் கொண்டார்.
 
ஆட்டத்தின் 3-வது ஓவரின் கடைசி பந்தில் கார்ட்ரைட்டை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றிய புவனேஸ்வர் குமார், 5-வது ஓவரின் 5-வது பந்தில் வார்னரை அவுட்டாக்கினார். இருவரையும் தலா 1 ரன்னில் பெவிலியன் திருப்பினார்.
 
அடுத்து ஸ்மித் உடன் ட்ராவிட் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. ஹெட் 39 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 14 ரன்னில் ஸ்டம்பிங் மூலம் ஆட்டம் இழந்தார்.
 
கேப்டன் ஸ்மித் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியாவின் தோல்வி உறுதியானது. குல்தீப் யாதவ் வடே (2), ஆஷ்டோன் அகர் (0), கம்மின்ஸ் (0) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
 
ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருக்க ஆஸ்திரேலியா 43.1 ஓவரில் 202 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிக்ள கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

மூலக்கதை