இந்தியாவை சமாளிக்க தயார் : பாக்., பிரதமர், அப்பாஸி தகவல்

தினமலர்  தினமலர்
இந்தியாவை சமாளிக்க தயார் : பாக்., பிரதமர், அப்பாஸி தகவல்

நியூயார்க்: ''இந்தியா, 'கோல்ட் ஸ்டார்ட்' என்ற யுக்தியைப் பயன்படுத்தினால், அதை எதிர்க்கத் தேவையான, குறுகிய துார அணு ஏவுகணையை தயார் செய்துள்ளோம்,'' என, பாகிஸ்தான் பிரதமர், ஷாகித் காஹன் அப்பாஸி கூறினார்.
பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள, ஷாகித் காஹன் அப்பாஸி, முதல் முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
நியூயார்க் நகரில், ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள அவர், அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் என்ற அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்காக, 'கோல்ட் ஸ்டார்ட்' என்ற புதிய யுக்தியை, நம் ராணுவம் உருவாக்கியுள்ளது.
வழக்கமாக போர் ஏற்பட்டால், படைகளை திரட்டி, எல்லைக்கு அனுப்ப, அதிக காலம் எடுக்கும். பாகிஸ்தான் அணுஆயுத நாடு என்பதால், உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், பாகிஸ்தானின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான், 'கோல்ட் ஸ்டார்ட்' கொள்கை.
இதன்படி, ராணுவத்தின் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள், எந்த நேரத்திலும் தயாராக இருப்பர்.
உத்தரவு கொடுத்தவுடன், சில மணி நேரத்திலேயே, இந்தப்படையினர், பாகிஸ்தானுக்குள் நுழைந்து, முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவதுடன், எதிர் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்துவர்.
இது தொடர்பாக, நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில், பாகிஸ்தான் பிரதமர், அப்பாஸி கூறியதாவது:
இந்தியாவின், கோல்ட் ஸ்டார்ட் முறையை சமாளிக்க, பாகிஸ்தான் தயாராக உள்ளது. இந்தியாவின் யுக்தியை சமாளிக்க, குறுகிய துாரத்துக்கு பாய்ந்து சென்று தாக்கும், அணு ஏவுகணையை தயார் செய்துள்ளோம். நாட்டின் அணு ஆயுதங்கள், மிகவும் பாதுகாப்பான முறையில் உள்ளன.
அதுபோலவே, இந்த ஏவுகணைகளும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளன.
எதிரிகளோ, பயங்கரவாதிகளோ அதை நெருங்க முடியாது. மற்ற சில நாடுகளை விட,எங்கள் அணு ஆயுதங்கள்,மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
நாங்கள் அணு ஆயுதங்களை பாதுகாப்பான முறையில் வைத்திருக்கவில்லை என சிலர், வீண் பிரசாரம் செய்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாத்து வரும் எங்களுக்கு, தொடர்ந்து எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது தெரியும்; இதில் வீண் சந்தேகம் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.நா., தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்

அமெரிக்காவில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில், பாகிஸ்தான் பிரதமர், அப்பாஸி கூறியதாவது:
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால், முதலில், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையை, ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு அளிக்கும் வகையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்திய அரசு, தொடர்ந்து பிடிவாதமாக உள்ளது. அனைத்து நாடுகளுடனும் நட்புடன் இருக்க வேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை