'செக்ஸ்' சாமியார் குர்மீத் வங்கி கணக்கில் ரூ.75 கோடி இருப்பது அம்பலம்

தினமலர்  தினமலர்
செக்ஸ் சாமியார் குர்மீத் வங்கி கணக்கில் ரூ.75 கோடி இருப்பது அம்பலம்

சண்டிகர்: ஹரியானாவை சேர்ந்த, செக்ஸ் சாமியார், குர்மீத் ராம் ரஹீமின், 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் பெயரில், 504 வங்கிக் கணக்குகள் இருப்பதும், அவற்றில், 75 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

20 ஆண்டு சிறை


ஹரியானாவில், பா.ஜ.,வை சேர்ந்த, மனோகர் லால் கட்டார் முதல்வராக உள்ளார். சிர்சா மாவட்டத்தில், 'தேரா சச்சா சவுதா' அமைப்பை நடத்தி வந்த, குர்மீத் ராம் ரஹீமுக்கு, பாலியல் பலாத்கார வழக்கில், 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவன் சிறையில் அடைக்கப் பட்டுள்ளான்.

கடந்த மாதம், குர்மீத் ராம் ரஹீம், குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும், அவனது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்; இதில், பலர் இறந்தனர்; ஏராளமான பொதுச் சொத்துக்கள் நாசமாயின. இந்த வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த கோர்ட், சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துக்களின் மதிப்பை கணக்கிட்டு, அதை, தேரா சச்சா சவுதா அமைப்பிடமிருந்து வசூலிக்க, மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, அந்த அமைப்பின் பெயரிலும், அமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பெயரிலும் உள்ள வங்கிக் கணக்குகளை பட்டியலிடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அசையா சொத்துக்கள்


அதில், தேரா சச்சா சவுதா அமைப்பின் பெயரில், மொத்தம், 504 வங்கிக் கணக்குகளும், அவற்றில், 75 கோடி ரூபாயும் டிபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகவும், மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த அமைப்புக்கு சொந்தமாக, சிர்சாவில் மட்டும், 1,435 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மூலக்கதை