தமிழகத்தில் தனியார் பள்ளிகளை மூட அரசு தயாரா? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

விகடன்  விகடன்
தமிழகத்தில் தனியார் பள்ளிகளை மூட அரசு தயாரா? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை  இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, "தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ க்களை தகுதி நீக்கம்  செய்தது குறித்து வழக்கு விசாரணையில் இருப்பதால் இப்போது எந்த கருத்தும் சொல்ல  முடியாது. தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான, நிலையான ஆட்சி அமைய வேண்டும்.

அ.தி.மு.க.ஆட்சியை அகற்ற தி.மு.க. முயல்கிறது. மக்களுக்கான நலத் திட்டங்களை விரைந்து அ.தி.மு.க.நிறைவேற்ற வேண்டும். ஜி.எஸ்.டி.வரி விதிப்பால் ஏழை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. வரி செலுத்த தகுதி உள்ளவர்களை வரி விதிப்புக்குள் கொண்டு வரவே ஜி.எஸ்.டி  அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

தமிழக மாணவர்களுக்காக நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும். நாடு முழுவதும் 62 பள்ளிகளுக்கான அறிவிப்பு வந்த போது 10 பள்ளிகளாவது தமிழகத்தில் வர வேண்டும் என விரும்பினேன். அதற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அதன் பின்னர் வந்த ஓ.பி.எஸ், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்து, கடிதம் கொடுத்துள்ளேன். இப்போது நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தவிட்டுள்ளதை வரவேற்கிறேன். நவோதயா பள்ளிகள் அமைந்தால் தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும். கல்வி தரம் உயரும். நீட் போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.

ஆரம்ப கல்வியில்  தமிழை படிக்க விடாமல் தடுத்தது தி.மு.க.வின் ஆட்சி. அப்போது தான்  தனியார் பள்ளிகள்   தாராள மயமானது. தனியார் பள்ளிகளை தமிழகத்தில் மூட தயாரா?. தனியார்  பள்ளியில் சேர குறைந்தது 25 ஆயிரம் பெறப்படுகிறது. எந்த கட்டண செலவு இல்லாமல் நவோதயா பள்ளி இருக்கிறது. உணவு உறைவிடம் உள்பட. இதை வேண்டாம் என்று சொல்ல எந்த கட்சிக்கும் அருகதை இல்லை. ஒரு அரசு பள்ளியாவது 50 ஆண்டுகளில் தனியார் பள்ளிக்கு நிகராக மாறி உள்ளதா?, நவோதயா பள்ளிகளுக்கு  அனுமதி இல்லை என்றால் தனியார் பள்ளிகளை தமிழகத்தில் மூட வேண்டும். தி.மு.க புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறது. கண்ணுக்கு தெரியாத கிரிமி தான் தி.மு.க. கழகங்கள் இல்லாத தமிழகம் விரைவில் உதயமாகும் என்று அவர் தெரிவித்தார்.

அதன் முன்னர் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் முன்னாள் திருத்தணி எம்.எல்.ஏ.வும்.முன்னாள் பா.ம.க பொதுச் செயலாளருமான ரவிராஜன்  பாஜக வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மூலக்கதை