காந்திபுரம் பாலத்தின் ஒரிஜினல் வடிவம் திருத்தம்... வரைபடம் தர நெடுஞ்சாலைத்துறைக்கு வருத்தம்!

தினமலர்  தினமலர்
காந்திபுரம் பாலத்தின் ஒரிஜினல் வடிவம் திருத்தம்... வரைபடம் தர நெடுஞ்சாலைத்துறைக்கு வருத்தம்!

கோவை காந்திபுரம் மேம்பாலத்தின் ஒரிஜினல் வடிவம், சிலரது கட்டடங்களைக் காப்பாற்றுவதற்காக மாற்றப்பட்டதை ஒப்புக்கொள்ளாமல், பாலத்தின் வரைபடத்தை தர மறுத்துள்ளது, நெடுஞ்சாலைத்துறை.
கோவை மாநகரின் இதயப்பகுதியாக விளங்கும் காந்திபுரம் சந்திப்பு, நுாறடி ரோடு சந்திப்பு மற்றும் நஞ்சப்பா ரோட்டில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், காந்திபுரத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, கடந்த 2010 செம்மொழி மாநாட்டின்போது, அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன் பின், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, பாலத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்க, 'கன்சல்டிங்' நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
காந்திபுரம் மற்றும் நுாறடி ரோடு ஆகிய இரு சந்திப்புகளிலும், இரண்டு 'ரோட்டரி'களுடன், கிராஸ்கட் ரோடு, பாரதியார் ரோடு, நுாறடி ரோடு, சின்னச்சாமி ரோடு போன்ற வெவ்வேறு ரோடுகளுக்குப் போவதற்கான அணுகுபாலங்களுடன் பாலம் வடிவமைக்கப்பட்டிருந்தது. நஞ்சப்பா ரோட்டில் செல்லும் வாகனங்கள், பாலத்தில் ஏறி, எந்த ரோட்டிலும் இறங்கிக் கொள்ளும் வகையில், 'இன்டர் செக்ஷன்' மற்றும் 'சிக்னல்' ஏதுமில்லாத வகையில், பாலம் கட்ட திட்டம் இருந்தது.
ஒரிஜினல் வடிவமைப்பின்படி, சித்தி விநாயகர் கோவில், சில கடைகள் உட்பட பல்வேறு கட்டடங்களை அகற்ற வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பின், ஒன்றுக்கும் உதவாத வகையில், பாலத்தின் வடிவம் மாற்றப்பட்டது; கட்டடங்கள் அனைத்தும் தப்பிவிட்டன. இதற்காக, பெரும் தொகை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் சிலருக்கு கை மாறியதாக சர்ச்சை எழுந்தது.
கோவையைச் சேர்ந்த வக்கீல் லோகநாதன், காந்திபுரம் பாலம் பற்றிய பல்வேறு தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோரியிருந்தார். அதில், பாலத்தின் வடிவம் மாற்றப்பட்ட விபரத்தையும், வரைபடங்களையும் கேட்டிருந்தார்.ஆனால், ஒரு முறை 'ப்ளான்' திருத்தப்பட்டது என்பதை மட்டும் ஒப்புக் கொண்ட நெடுஞ்சாலைத்துறை, 'பாலத்தின் பாதுகாப்பு கருதி, வரைபட நகலைத் தர இயலாது என்று பதிலளித்துள்ளது.
மனுதாரர் லோகநாதன் கூறுகையில், ''நகரின் மத்தியில் கட்டப்படும் ஒரு பாலத்தின் வரைபடத்தைத் தர மறுத்து, 'பாதுகாப்பு காரணம்' என்று 'சப்பைக்கட்டு' கட்டுவதில் இருந்தே, நெடுஞ்சாலைத்துறை இதில் தவறு செய்திருப்பது தெளிவாகிறது; சிலரது நலனுக்காக, ஊர் நலன் மறுக்கப்பட்டதும் உறுதியாகியுள்ளது. வரைபடம் கோரி, மேல் முறையீடு செய்வோம். ஒரிஜினல் வடிவம் எப்படி இருந்தது என்பது, துறை அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்,'' என்றார்.நெடுஞ்சாலைத்துறையின் மடியில் கனம் இருப்பது, ஊருக்கே தெரிகிறது.

வானத்துக்கே பாலம்!பாலத்தின் வடிவம் மாற்றப்பட்டதால், நுாறடி ரோட்டில் கட்டப்படும் இரண்டாவது அடுக்கு பாலம், மிக உயரமாக, வானத்துக்கே போவதைப் போல கட்டப்படுகிறது. நகரின் புதிய 'சூசைடு பாயின்ட்' ஆக அது மாறுமென்று, இப்போதே பலரும் அச்சப்படும் நிலையில் உள்ளது. ஒரு மாநில முதல்வரின் கையிலுள்ள துறையில், இவ்வளவு மோசமான வடிவமைப்பில், வேறு எங்கும் பாலம் கட்டப்படுமா என்பது சந்தேகமே.



-நமது நிருபர்-

மூலக்கதை