குல்தீப் ஹாட்ரிக் சாதனையில் இந்தியா மகத்தான வெற்றி

தினகரன்  தினகரன்

கொல்கத்தா : இரண்டாவது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த, எளிய இலக்கையும் எட்ட முடியாமல் ஆஸ்திரேலியா பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வென்றது. 2வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் பால்க்னர், ஸம்பாவுக்கு பதிலாக ரிச்சர்ட்சன், அகர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். ரோகித் ஷர்மா 7 ரன்னில் கோல்டர் நைல் வேகத்தில் வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த ரகானே, கோஹ்லி நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரைசதம் அடிக்க, இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2வது விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்த நிலையில் ரகானே (55) ரன் அவுட்டாக ஆட்டத்தின் போக்கு மாறியது.  மணிஷ் பாண்டே (3) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். கேதார் ஜாதவ் (24) சிறிது நேரமே தாக்குபிடித்தார். இவரை வெளியேற்றிய கோல்டர் நைல், தனது அடுத்த ஓவரில், சதத்தை நெருங்கிய கோஹ்லியையும் (92) விட்டு வைக்கவில்லை. கோஹ்லி ஆட்டமிழக்க அணியின் ஸ்கோர் ஒரேடியாக சரிந்தது. கடந்த போட்டியை போல் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட டோனி (5), ஹர்திக் பாண்டியா (20) ஜோடி ஏமாற்றியது. இவர்களை வெளியேற்றிய ரிச்சர்ட்சன், புவனேஷ்வர் (20) விக்கெட்டையும் கைப்பற்றினார். இறுதியில் குல்தீப் டக் அவுட், சாஹல் 1 ரன்னில் ரன் அவுட்டாக, இந்திய அணி 50 ஓவரில் 252 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பும்ரா 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் கோல்டர் நைல், ரிச்சர்ட்சன் தலா 3, கம்மின்ஸ், அகர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 253 ரன் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு புவனேஷ்வர் அதிர்ச்சி அளித்தார். இவர் கார்ட்ரைட் (1), வார்னர் (1) விக்கெட்டை அடுத்தடுத்து கைப்பற்றினார். கேப்டன் ஸ்மித், ஹெட் ஜோடி தாக்குபிடித்து 76 ரன் சேர்த்த நிலையில், சாஹல் சுழலில் ஆஸி. மீண்டும் தடுமாற்றம் கண்டது. ஹெட் (39), அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை (14) சாஹல் வெளியேற்றினார்.  100வது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த கேப்டன் ஸ்மித்தை (59) ஹர்திக் வெளியேற்ற, ஆஸி. கையில் இருந்த வெற்றி, இந்தியாவின் பக்கம் திரும்பியது. 33வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், யாரும் எதிர்பார்க்காத மாயாஜாலத்தை நிகழ்த்தினார். வேட் (2), அகர் (0), கம்மின்ஸ் (0) என ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் கதையை ஒரேடியாக முடித்து வைத்தார். சேட்டன் ஷர்மா (1987), கபில் தேவுக்கு (1991) பிறகு 26 ஆண்டுகள் கழித்து ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் இந்திய வீரர் என்ற சாதனையை குல்தீப் படைத்தார். ஆஸ்திரேலியா 43.1 ஓவரில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோற்றது. கடைசி வரை போராடிய ஸ்டோய்னிஸ் 62 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 3வது போட்டி இந்தூரில் நாளை மறுதினம் நடக்கிறது. ஹர்திக்கை தாக்கிய பந்து  47வது ஓவரில் பேட் செய்த புவனேஷ்வர் குமார் அடித்த பந்து, நேராக ஹர்திக் பாண்டியாவின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. மிக வேகமாக பந்து தாக்கியதில் ஹர்திக் தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக ஆஸ்திரேலிய வீரர்கள் விரைந்து வந்து, ஹர்திக்குக்கு உதவினர். ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஹர்திக் காயமின்றி தப்பினார்.கடைசி 15 ஓவரில் வெறும் 67 ரன்களே  இந்திய அணி கடைசி 15 ஓவரில் வெறும் 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் 7 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 35 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 185 ரன்னுடன் இருந்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 252 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 8 ரன்னில் கோஹ்லி தவற விட்ட சாதனை  இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி 90+ ரன்களில் சதத்தை தவறவிடுவது 6வது முறையாகும். 8 ரன்னில் சதத்தை மட்டுமல்ல, சச்சினுக்கு பிறகு அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் நேற்று தவற விட்டார். தற்போது கோஹ்லி (196 போட்டி) 30 சதங்களுடன், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பாண்டிங்குடன் (375 போட்டி, 30 சதம்) 2வது இடத்தில் இருக்கிறார். இந்தாண்டில் கோஹ்லி 20 போட்டியில் நேற்று 11வது முறையாக 50+ ரன்களை எடுத்தார். இதற்கு முன், 2011ல் 34 போட்டியில் 12 முறை 50+ ரன்களை அவர் எடுத்துள்ளார்.

மூலக்கதை