ஜப்பான் ஓபன் பேட்மின்டன் சிந்து, சாய்னா ஏமாற்றம்: கால் இறுதியில் காந்த், பிரன்னாய்

தினகரன்  தினகரன்

டோக்கியோ : ஜப்பான் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றில் பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால் இருவரும் தோற்று ஏமாற்றமளித்தனர். கடந்த வாரம் நடந்த கொரியா ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் இறுதிப் போட்டியில், உலக சாம்பியனான ஜப்பானின் நஸோமி ஓகுஹராவை வென்ற பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில், ஜப்பான் ஓபன் தொடரில் 2ம் சுற்றில் சிந்து மீண்டும் நஸோமி ஓகுஹராவை சந்தித்தார். நேற்று நடந்த இப்போட்டியில் துவக்கத்தில் சிந்து 11-9 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த போதிலும், பின்னர் ஓகுஹரா அதிரடியாக ஆடினார். முதல் செட்டை ஓகுஹரா 21-18 என்ற கணக்கில் கைப்பற்றினார். 2வது செட்டிலும் ஓகுஹரா முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். இதன் மூலம் 21-18, 21-8 என்ற நேர் செட்களில் அவர் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். சிந்துவுடன் மோதிய 9 போட்டியில் ஓகுஹரா 5வது வெற்றியை பதிவு செய்தார். இந்தியாவின் மற்றொரு நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெஹ்வால், 2ம் சுற்றில் 16-21, 13-21 என்ற நேர் செட்களில் முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி காந்த் 21-12, 21-11 என்ற செட்களில் யுன் ஹூவையும் (ஹாங்காங்), பிரன்னாய் 21-16, 23-21 என்ற செட்களில் ஜென் ஹோவையும் (சீன தைபே) வென்று கால் இறுதிக்கு முன்னேறினர்.

மூலக்கதை