3 டெஸ்ட், 6 ஒருநாள் 3 டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்திய அணி தெ.ஆ. பயணம்

தினகரன்  தினகரன்

ஜோகன்னஸ்பெர்க் : அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கும் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருப்பது உறுதியாகி உள்ளது. டிசம்பர் 26ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியை, ‘பாக்சிங்டே போட்டி’ என கிரிக்கெட்டில் அழைப்பது வழக்கம். இந்தாண்டு இறுதியில் இந்திய அணியின் தென் ஆப்ரிக்க பயணத்தில் ‘பாக்சிங்டே’ போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு முன்பாக இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் மோத உள்ளது. அந்த தொடர் டிசம்பர் 24ம் தேதிதான் முடிகிறது. இதனால், தென் ஆப்ரிக்காவுடன் பாக்சிங் டே போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.  இதையடுத்து, தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தை ஜனவரி 5ம் தேதியிலிருந்து இந்திய அணி தொடங்க தற்போது முடிவாகி உள்ளது. முதலில் 4 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் மாற்றம் செய்யப்பட்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 என மாற்றியிருப்பதாக தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. டிசம்பர் 28ம் தேதி தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி, 30, 31ம் தேதிகளில் 2 நாள் பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 5ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள், அதைத் தொடர்ந்து ஒருநாள், டி20 தொடர்களுக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

மூலக்கதை