தனிகட்சியா? ஆம்ஆத்மியா? கமல்-கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தனிகட்சியா? ஆம்ஆத்மியா? கமல்கெஜ்ரிவால் முக்கிய ஆலோசனை

சென்னை : டெல்லி முதல்வர் அரவிந்த் ெகஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசனை சென்னையில் இன்று சந்தித்து பேசினார். தமிழகத்தில் விவசாயிகள் பிரச்னை, நீட் தேர்வு, போக்குவரத்து தொழிலாளர் பிரச்னை, ரேஷன் கடைகளில் பொருட்கள் பஞ்சம், அரசு ஊழியர் போராட்டம், மருத்துவ மாணவி அனிதா மரணம், கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டம் என பல்வேறு தரப்பில் தமிழகம் முழுவதும் தினமும் போராட்டம் நடந்து வருகிறது.

இப்பிரச்னையை அரசு தீர்த்து வைக்க கவனம் செலுத்தாமல் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் என்று எடப்பாடி அரசு மீது நடிகர் கமல்ஹாசன் சரமாரியாக குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.

கமலின் கருத்துக்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் கட்சி தொடங்க உள்ளீர்களா? என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கமலிடம் கேட்டபோது கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்குவேன், நான் அரசியலுக்கு வந்து வெகுகாலம் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து கமல் விரைவில் அரசியலில் தீவிரமாக குதிக்கவிருப்பதாக பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து அரசியல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் கமல் சேரப்போவதாக தகவல் பரவியது. அதை அவர் மறுத்தார்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கமலை சந்தித்தார். சென்னைக்கு இன்று மதியம்  வந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஆழ்வார்பேட்டை எல்டாம் சாலையில் உள்ள கமல் அலுவலகத்தில் அவரை சந்தித்தார்.

அப்போது அரசியல் விவகாரங்கள் குறித்து இருவரும் பேசினர். ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.

மாலையில் கெஜ்ரிவால் டெல்லி திரும்புகிறார்.

இந்த சந்திப்பின்போது ஆம் ஆத்மி கட்சியில் இணைய கமலுக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. ஊழலை ஒழிக்கவே அரசியலுக்கு வருவதாக கமல் கூறி வருகிறார்.

இதேபோல் ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் அரசியலுக்கு வந்தது ஆம் ஆத்மி கட்சி. இதனாலேயே கமலை கெஜ்ரிவால் சந்தித்து பேசியிருப்பதாக தெரிகிறது.

கடந்த ஆண்டு டெல்லி சென்றிருந்தபோது கமலும் கெஜ்ரிவாலை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை