பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மெக்சிகோவுக்கு கூகுள் உதவி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மெக்சிகோவுக்கு கூகுள் உதவி

மெக்சிகோ : மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. ஒரு தனியார் பள்ளிக்கட்டிடமும் இடிந்ததில்  21 குழந்தைகள் ஒரே நேரத்தில் பலியானது மெக்சிகோவை மேலும் நிலை குலையச் செய்துள்ளது.

மேலும் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகளை பெற்றோர்கள் தேடும் புகைப்படங்கள், வீடியோக்கள்  உலகை உலுக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரமாக மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் 30 லட்சம் மக்கள் உணவின்றி இருளில் தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கூகுள் சி. இ. ஓ சுந்தர் பிச்சை, பாதிக்கப்பட்டவர்களுக்கு கூகுள் நிறுவனத்தின் சார்பில் நிவாரண நிதியாக 10 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை 248 பேர் பலியாகியுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் முழுமையடையாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கல்லூரி மாணவர்களும் தன்னார்வ அமைப்பினரும் மீட்புப் பணியில் இறங்கியுள்ளனர். மெக்சிகோவில் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 90 பேர் பலியாகினர்.

நேற்றைய சம்பவம் அங்கு நடந்த 2வது பெரிய பேரிடர் சம்பவமாகும். கடந்த 1985ம் ஆண்டு மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியானார்கள்.

அதன் 33ம் ஆண்டு நினைவு தினமான நேற்று பூகம்பம் தாக்கியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை