குடகில் தங்கவைக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் ஓரிரு நாளில் தமிழகம் வருகின்றனர்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
குடகில் தங்கவைக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் ஓரிரு நாளில் தமிழகம் வருகின்றனர்?

சென்னை : கர்நாடக மாநிலம் குடகில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் ஓரிரு நாட்களில் தமிழகம் வர இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக கூறி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர்.

பின்னர் தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஜக்கையன் எடப்பாடி அணிக்கு தாவியதால் 18 பேர் மட்டுமே எடப்பாடிக்கு எதிராக மனு அளித்த பட்டியலில் இருந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் மூன்று வாரங்களுக்கும் மேலாக தங்கி இருந்த ஆதரவு எம்எல்ஏக்கள் குடகிற்கு சென்றனர்.

தொடர்ந்து எடப்பாடி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்து தங்கியிருந்த நிலையில் 14ம் தேதி ஆதரவை வாபஸ் வாங்கியது குறித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஆனால், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும் நேரில் விளக்கம் அளிக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய வேண்டி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.   18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க உத்தரவுக்கு தடை ஏதுமில்லை என நீதிமன்றம் கூறியது.

இதனால் இவர்களின் மனு மீதான கோரிக்கைக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இதனால், நீண்ட நாட்களாக குடகில் தங்கவைக்கப்பட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 18 பேரும் தினகரனுடன் இணைந்து கட்சியில் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஓரிரு நாட்களில் சென்னை வர இருப்பதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதாகவும் தெரிகிறது.

தமிழகம் திரும்பும் 18 பேரில் பலர் எடப்பாடி அணிக்கு மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை