முதுநிலை மருத்துவ சேர்க்கை முறைகேடு : புதுச்சேரி உயர் அதிகாரிகளிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதுநிலை மருத்துவ சேர்க்கை முறைகேடு : புதுச்சேரி உயர் அதிகாரிகளிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை

புதுச்சேரி : புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பில் 318 இடங்கள் உள்ளன. மருத்துவ கவுன்சில் உத்தரவுப்படி இதில் 162 அரசு ஒதுக்கீடாகவும் மீதமுள்ள 152 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டிலும் நிரப்பப்பட வேண்டும்.

இவை புதுவை அரசின் மாணவர் சேர்க்கை மையமான சென்டாக் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இதில் பல்வேறு முறைகேடு நடப்பதாக மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கையிலும், கட்டண விவகாரத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதுதொடர்பான ஆவணங்களை திரட்டிய அவர், அவற்றை சிபிஐக்கு அனுப்பியிருந்தார்.

இதையடுத்து சிபிஐ குழு புதுச்சேரி வந்து சென்டாக் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டது. அதிகாரிகளிடமும் தீவிர விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடுகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக சிபிஐ தற்போது குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகளான சென்டாக் சேர்மன் நரேந்திரகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலர் பிஆர் பாபு ஆகியோர் மீது சிபிஐ அதிரடியாக வழக்குபதிவு செய்துள்ளது. இதுதவிர சுகாதாரத்துறை இயக்குனர் ராமன், சென்டாக் கன்வீனர் கோவிந்தராஜ், இணை கன்வீனர் பழனிராஜா, ஒருங்கிணைப்பாளர் ஜோநாதன் டேனியல் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் உள்பட 13 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளது.

இதையடுத்து சுகாதாரத்துறை செயலர் பாபு, இயக்குனர் ராமன் உள்ளிட்ட 5 அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ நேற்று அதிரடியாக ரெய்டு நடத்தியது. 15 பேர் கொண்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இதில் முக்கிய ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியதாக தெரிகிறது.

மேலும் உயர்அதிகாரிகள் 5 பேரை சிபிஐ விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு தொடர்பாக அவர்களிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளது.

இதனால் புதுச்சேரி சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் எந்த நேரத்திலும் சிபிஐயால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது. புதுவையில் சிபிஐ தொடர்ந்து இன்றும் முகாமிட்டுள்ளதால் அரசு அதிகாரிகள், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர்.

சிபிஐ நடவடிக்கையால் கடந்தாண்டுகளில் முறைகேடாக முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடம்பெற்றவர்களுக்கு சிக்கல் வருமா? என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

.

மூலக்கதை