மதங்கள் அடிப்படையில் சமூகத்தை பிளக்க வேண்டாம் : மே.வங்க அரசுக்கு ஐகோர்ட் குட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதங்கள் அடிப்படையில் சமூகத்தை பிளக்க வேண்டாம் : மே.வங்க அரசுக்கு ஐகோர்ட் குட்டு

கொல்கத்தா : மதங்கள் அடிப்படையில் சமூகத்தை பிளக்க வேண்டாம் என மேற்கு வங்க மாநில அரசுக்கு கொல்கத்தா ஐகோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.

இம்மாத இறுதியில் விஜயதசமியும், அக்டோபர் முதல் நாளில் முகரம் பண்டிகையும் கொண்டாடப்பட இருக்கிறது. நம்மூரில் வினாயகர் சதுர்த்தி முடிந்ததும் சிலைகள் கடல் மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்படுவது போல் மேற்கு வங்கத்தில் விஜயதசமிக்காக துர்கா சிலைகள் ஆங்காங்கு வைத்து வழிபடப்படும்.

பின்னர் அவைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும். விஜயதசமிக்கு மறுநாள் முகரம் வருவதால் செப்டம்பர் 30 இரவு 10 மணிக்கு மேலும், அக்டோபர் 1 அன்றும் துர்கா சிலைகள் கரைக்க மாநில அரசு தடை விதித்துள்ளது.

இதை எதிர்த்து பல பொது நல வழக்குகள் கொல்கத்தா ஐகோர்ட்டில் தொடரப்பட்டன.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி(பொறுப்பு)ராகேஷ் திவாரி தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் கிஷோர் தத்தா ஆஜராகி, சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் இது போன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது. நிர்வாக விவகாரங்களில் கோர்ட் தலையிடக்கூடாது என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருப்பதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பல சந்தர்ப்பங்களில ்கூறியுள்ளார். அவர் சொல்வதை கேளுங்கள்.

போலீஸ் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்காதீர்கள். அந்தந்த மதத்தினர் அவரவர் மத சடங்குகளை சுதந்திரமாக செய்ய உரிமை இருக்கிறது.

அதில் மாநில அரசு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. இரண்டு சமூகத்தினர் ஒன்றாக வாழ முடியாது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் இத்தகைய தடுப்பு நடவடிக்கைகள் தேவையில்லை.

மதங்களின் பெயரால் சமூகத்தில் பிளவு ஏற்படுத்தக்கூடாது என்றனர்.

இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில்  வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

.

மூலக்கதை