தேமுதிக நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியீடு? : பிரேமலதாவிற்கு முக்கிய பொறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேமுதிக நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியீடு? : பிரேமலதாவிற்கு முக்கிய பொறுப்பு

நெல்லை : கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து 104 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. இதில் விஜயகாந்த் உட்பட அனைவரும் தோல்வியைத் தழுவினர்.

அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் தேமுதிக தொண்டர்கள் விரக்தி அடைந்தனர். பாமக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாநாடு, பொதுக்கூட்டங்கள் என நடத்தி கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் அவ்வப்போது உத்வேகத்தை அளித்து வருகின்றன.

ஆனால் ேதமுதிக சார்பில் சமீபகாலமாக எந்தவொரு பொதுக்கூட்டமோ, மாநாடோ நடத்தப்படவில்லை. இது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சோர்வடையச் செய்துள்ளது.

எனவே பிரேமலதாவை தீவிரமாக களமிறமிக்கவேண்டும் என்ற எண்ணமும், அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கவேண்டும் என்ற எண்ணமும் தொண்டர்களிடையே வலுவாக ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கட்சியின் அமைப்பு தேர்தல் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இதில் கட்சியிலுள்ள அனைத்து அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமித்ததுடன் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர், நிறுவன தலைவராக விஜயகாந்த் நீடிப்பார் என்பது நிச்சயமாகிவிட்டது.

அதே வேளையில் மாநில அவைத்தலைவர், பொருளாளர், தலைமை நிலைய செயலாளர், மாநில கொள்கை பரப்பு செயலாளர், துணை செயலாளர்கள் 4 பேர் (ஒருவர் பெண்) நியமிக்கப்பட உள்ளனர்.

இதில் கட்சியின் வளர்ச்சிக்காக கொள்கைபரப்பு செயலாளராக பிரேமலதா அறிவிக்கப்பட உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

மற்ற பொறுப்புகளுக்கும் விஜயகாந்தின் நம்பிக்கைக்கு உரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து காரைக்குடியில் வரும் 30ம்தேதி விஜயகாந்த் தலைமையில் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமும் நடைபெற உள்ளது.   புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தலைமைக்கழக நிர்வாகிகள் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

இதில் அடுத்தடுத்து என்ன செய்வது என்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

.

மூலக்கதை