ஜாக்டோ-ஜியோ போராட்ட வழக்கு : ஐகோர்ட் கிளையில் தலைமைச் செயலர் ஆஜர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜாக்டோஜியோ போராட்ட வழக்கு : ஐகோர்ட் கிளையில் தலைமைச் செயலர் ஆஜர்

மதுரை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிரான வழக்கில், ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி, அரசின் நிலைப்பாட்டை தெரிவித்தார். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் கூட்டு செயல் குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில், கடந்த 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு எதிராக மதுரையை சேர்ந்த வக்கீல் சேகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஐகோர்ட் கிளை தடை விதித்தது.

தடையை மீறி வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. இதனால் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஐகோர்ட் கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு செப்.

15-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் ஆஜராகி, நீதிமன்ற தடையாணைக்குப் பிறகும் வேலைநிறுத்தத்தை தொடர்ந்த காரணம் குறித்து விளக்கம் அளித்தனர். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மதித்து உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.

அப்படி செய்தால் தலைமைச் செயலரை நீதிமன்றத்துக்கு வரவழைத்து உங்களது கோரிக்கையை கவனிக்க உத்தரவிடுவோம். மறுத்தால் போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்று தெரியும் எனக் கடுமையாக எச்சரித்தனர்.

இதையடுத்து 9 நாட்களுக்குப் பிறகு வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்தி அன்று மதியமே அரசு அலுவலர்கள் பணிக்கு திரும்பினர்.

பின்னர் நீதிபதிகள், அரசு ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இன்று (செப். 21) தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

அதன்படி இவ்வழக்கு நீதிபதிகள் கே. கே. சசிதரன், ஜி. ஆர். சுவாமிநாதன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு மீண்டும் வந்தது. இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஐகோர்ட் கிளையில் ஆஜரானார்.

வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து, அவர் நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தார்.

.

மூலக்கதை