அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களின் எண்ணம் பகல் கனவாக முடியும்-எடப்பாடி பழனிசாமி

PARIS TAMIL  PARIS TAMIL
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களின் எண்ணம் பகல் கனவாக முடியும்எடப்பாடி பழனிசாமி

நாகை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாகை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலையூரில் நடந்தது.

விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிலர் மனக்கோட்டை கட்டிக்கொண்டு அதை செய்வேன், இதை செய்வேன், வானத்தை வில்லாக வளைப்பேன் என்று பேசி மக்களை கவரும் வேலையை செய்கிறார்கள். இவர்கள் கட்டுவது மலைக்கோட்டை அல்ல. அது மணல்கோட்டை என்பது மக்களுக்கு தெரியும்.

சிலர் கற்பனை உலகில் இருந்து கொண்டு தானும் கெட்டு, தன்னை நம்பியவர்களையும் கெடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் கற்பனையை நிறுத்திக்கொண்டு தானும் கெடாமல், தன்னை நம்பியவர்களையும் கெடுக்காமல் இருக்க வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட எண்ணற்ற திட்டங்களை இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் 25 அரங்குகளில் தத்ரூபமாக அமைத்துள்ளனர். நாகை மாவட்டத்தோடு சேர்த்து 14 மாவட்டங்களில் இந்த நூற்றாண்டு விழா நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயனடைந்துள்ளனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா செய்த சாதனைகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது.

ஆனால் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் அரசியல் பேசலாமா? என்கிறார்.

தி.மு.க. ஆட்சிகாலத்தில் எத்தனையோ அரசு விழாக்கள் நடந்தன. அந்த விழாக்களில் கருணாநிதி அரசியல் பேசி உள்ளார். இதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று திட்டமிட்டு சதிவலை பின்னப்படுகிறது. இந்த ஆட்சியில் என்ன குறை கண்டார்கள்.

6 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் மக்களை சென்று சேர்ந்துள்ளன. அது உங்களுக்கு பொறாமையாக உள்ளது. சிலர் இந்த ஆட்சி கலைந்து விடும் என்கிறார்கள். அது நடக்காது. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று தான் மக்கள் விரும்புகிறார்கள். இந்த ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் எண்ணம் பகல்கனவாக முடியும். இந்த அரசுக்கு மக்கள் பலம் உள்ளது என்பதற்கு இந்த கூட்டமே சாட்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை