காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு

PARIS TAMIL  PARIS TAMIL
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வந்தது.

தமிழக அரசு தரப்பிலான வாதங்கள் கடந்த ஆகஸ்டு 2–ந் தேதி தொடங்கின. இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை 28 நாட்களுக்கு வெவ்வேறு தேதிகளில் நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான இறுதி வாதங்கள் நேற்றுடன் முடிவடைந்தன.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே நேற்று தன்னுடைய இறுதி வாதத்தின் போது கூறியதாவது:–

தமிழ்நாட்டில் இரண்டு சாகுபடிக்கான பாசனத்தை காவிரி நடுவர் மன்றம் அனுமதிக்கவில்லை. இதனால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இதனை மாற்றி அமைக்க வேண்டும்.

தங்கள் அணைகளில் இருந்து கர்நாடகம் ஒவ்வொரு மாதமும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு வழிவகை செய்யவேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை தண்ணீர் திறந்து விடும் அந்த மாநிலத்தின் கோரிக்கையை ஏற்கக் கூடாது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேலாண்மை திட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாராளுமன்றம் மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு ஒதுபோதும் அனுமதிக்கக்கூடாது.

அவர் இவ்வாறு கூறியதும் மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் குறுக்கிட்டு, காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவை திருத்தவோ அல்லது அதில் சில நிபந்தனைகளை சேர்க்கவோ பாராளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்கள், முக்கிய அம்சங்கள் மற்றும் நீர் மேலாண்மை நிபுணர்களின் கருத்துகள் ஆகியவற்றை எழுத்து வடிவில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
 

மூலக்கதை