'ஜிகாத்' திருமண விசாரணையை நிறுத்தக் கோரி வழக்கு

தினமலர்  தினமலர்
ஜிகாத் திருமண விசாரணையை நிறுத்தக் கோரி வழக்கு

புதுடில்லி: ஹிந்து பெண்ணை முஸ்லிமாக மதம் மாற்றி செய்யப்பட்ட திருமணம் குறித்த, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையை நிறுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த, ஷாபின் ஜகான் என்பவர், ஒரு ஹிந்து பெண்ணை, முஸ்லிமாக மதம் மாற்றி திருமணம் செய்ததாக, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'இந்தத் திருமணம் செல்லாது' என, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

உத்தரவுக்கு எதிரானது


இந்த தீர்ப்பை எதிர்த்து, ஜகான், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஹிந்து பெண்களை காதலித்து மதமாற்றம் செய்து திருமணம் செய்யும் முஸ்லிம் இளைஞர்கள், அந்த பெண்களை, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு அனுப்புவதாக, என்.ஐ.ஏ., தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

ஜகான் திருமணம் குறித்து, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆர்.வி.ரவீந்திரன் மேற்பார்வையில், என்.ஐ.ஏ., விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், ஜகான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, ரவீந்திரன் பொறுப்பேற்காத நிலையில், என்.ஐ.ஏ., விசாரணையை துவக்கியுள்ளது; அது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. அதனால், அந்த விசாரணையை நிறுத்த உத்தரவிட வேண்டும்.

மனைவி அடைப்பு


என் மனைவியின் விருப்பதற்கு மாறாக, அவரை, அவரது பெற்றோர், வீட்டில் அடைத்து வைத்து உள்ளனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து பதிலளிக்கும்படி, என்.ஐ.ஏ.,வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை