'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?

தினமலர்  தினமலர்
டிஜிட்டல் மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?

'டிஜிட்டல்' முறையில் மின் கட்டணம் செலுத்துவதை ஊக்குவிக்க, மின் வாரியம் சலுகை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு, நுகர்வோரிடம் எழுந்து உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், ரொக்க பணம், வங்கி காசோலை மற்றும் வரைவோலை, இணையதளம், 'மொபைல் ஆப்' வாயிலாக, மின் கட்டணம் வசூலிக்கிறது.

இணைய பரிவர்த்தனை :


மொத்தமுள்ள, இரண்டு கோடி மின் நுகர்வோரில், 30 லட்சம் பேர், இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்துகின்றனர். இந்தாண்டு ஜூலையில் துவக்கிய, 'மொபைல் ஆப்' சேவை வழியாக, இதுவரை, 65 ஆயிரம் பேர், 10.30 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளனர். 'டிஜிட்டல்' சேவை இருந்தும், பலரும், ரொக்க பணத்தில் தான் மின் கட்டணம் செலுத்துகின்றனர்.

இது குறித்து, மின் நுகர்வோர் கூறியதாவது: மத்திய அரசு, 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. இதற்காக, தனியார் மட்டுமின்றி, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும், இணையதள பணப் பரிவர்த்தனைக்கு முன்வந்துள்ளன. சமையல், 'காஸ்' சிலிண்டர் முன்பதிவு, கட்டணம் செலுத்துதல் போன்றவற்றுக்கு, ஐந்து ரூபாய் தள்ளுபடி தருகின்றன. இதே போல், மின் வாரியமும், 'டிஜிட்டல்' முறையில் மின் கட்டணம் செலுத்துவோருக்கு, சலுகைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பரிசீலனை :


இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தும் போது, பிரிவு அலுவலகங்களில் கூட்டம் நிற்காது. பணம் தொலைவது, திருடு போன்ற பிரச்னைகள் ஏற்படாது. 'அந்த பணம், உடனே வாரிய கணக்கிற்கு வரும்; எனவே, 'டிஜிட்டல்' முறையில் மின் கட்டணம் செலுத்துவோருக்கு சலுகை வழங்குவது குறித்து, உயரதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.


- நமது நிருபர் -

மூலக்கதை