'பாரிஸ் ஒப்பந்தத்தை விட அதிகமாக செயல்படுவோம்': ஐ.நா.,வில் சுஷ்மா

தினமலர்  தினமலர்
பாரிஸ் ஒப்பந்தத்தை விட அதிகமாக செயல்படுவோம்: ஐ.நா.,வில் சுஷ்மா

நியூயார்க்: ''சுற்றுச்சூழலை பாதுகாக்க, பாரிஸ் ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டும் செயல்படுவோம்,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ், ஐ.நா., சபையில் தெரிவித்தார்.

ஐ.நா., சபை கூட்டம், அமெரிக்காவின், நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் பேசியதாவது:

பருவநிலை மாறுபாடு பிரச்னையை சமாளிக்க, பாரிஸ் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்க, அந்த ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்டும் செயல்படுவோம். இதில், பா.ஜ., அரசு உறுதியாக உள்ளது. இந்த பூமியை பாதுகாக்கும் பொறுப்பை உணர்ந்துள்ளோம். இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து, சர்வதேச சோலார் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, மெக்சிகோ, நார்வே, பெல்ஜியம் நாட்டு தலைவர்களுடன், இரு தரப்பு உறவுகள் குறித்து சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தினார். மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுகனாத்தையும், அவர் சந்தித்து பேசினார்.

மூலக்கதை