சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மாநகராட்சி... புதிய முயற்சி! தெருக்கள், பூங்காக்களில் கிணறுகள் அமைக்க நடவடிக்கை

தினமலர்  தினமலர்
சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மாநகராட்சி... புதிய முயற்சி! தெருக்கள், பூங்காக்களில் கிணறுகள் அமைக்க நடவடிக்கை

சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதியில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்துடன், தெருக்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் கிணறுகள் அமைக்க, புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தற்போது, 1,894 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால்களை பராமரித்து வருகிறது. ஆனால், இந்த வடிகால்களில், மழைக்காலங்களை தவிர, அனைத்து நேரங்களிலும் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதுவே, சென்னையில் கொசு பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. சட்டவிரோதமான கழிவுநீர் இணைப்புகளை தடுக்க முடியாமல், மாநகராட்சி திணறி வருகிறது.

சிறப்பு திட்டம்:
இந்நிலையில், சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில், புதிதாக கட்டி வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தில், கழிவுநீர் இணைப்பு ஏதும் இல்லாமல் பாதுகாக்க, மாநகராட்சி பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. இதில், உள்ளூர் அரசியல்வாதிகள், மாநகராட்சி அதிகாரிகளின் கண்களில் மண்ணை துாவி விட்டு, மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்பு தரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்கும் வகையிலும், புதிதாக கட்டப்படும் மழைநீர் வடிகால் திட்டத்தில், மழைநீரை கொண்டு, விரிவாக்க பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் மாநகராட்சி சிறப்பு திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இதன்படி, ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பகுதியில், மழைநீர் ஒன்று சேரும் இடங்களில், புதிதாக மழைநீர் சேகரிப்புக்கு கிணறுகள் அமைக்கப்படுகின்றன.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தின் கீழ், அடையாறு, கூவம் வடிநில பகுதிகளான வளசரவாக்கம், அம்பத்துார், ஆலந்துார் மண்டலத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில், 1,980 தெருக்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன.

ரூ.1,100 கோடி:
மொத்தம், 265 கி.மீ., நீளத்திற்கு, 1,100 கோடி ரூபாய் செலவில், பல்வேறு சிப்பங்களாக இந்த பணிகள் நடக்கின்றன. இந்த பணியில், 70 சதவீதம் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தில், வடிகால்களில் வரும் மழைநீர், நீர்நிலைகளில் சேகரிப்பதும், ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க செய்வதும் தான், மாநகராட்சியின் இலக்கு. ஒரு பகுதியில் மழைநீர் வடிந்து வரும் இடத்தில், நீர்நிலைகள் ஏதும் இல்லாத பட்சத்தில், அங்குள்ள பூங்காக்கள், தெருக்கள், மாநகராட்சிக்கு சொந்தமான இதர பிற இடங்களில், 'சங்கன் வெல்' என்ற பெயரில், கிணறு ஒன்று அமைக்கப்படும்.

48 இடங்கள்:
மொத்தம், 15 அடி ஆழத்தில் அமைக்கப்படும் இந்த கிணற்றின் மையப்பகுதியில், 15 மீட்டர் ஆழத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்படும். இந்த கிணறு மூலம், மழைநீர் உள் சென்று, சுற்று வட்டார பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை கணிசமாக உயர்த்தும். மொத்தம், 48 இடங்களில் இந்த கிணறுகள் அமைக்கப்படுகின்றன. இதில், 22 இடங்களில் தற்போது பணிகள் முடிந்துள்ளன. கிணறுகள் அமைக்கும் பணிகள், 26 இடங்களில் நடந்து வருகின்றன. இந்த மூன்று மண்டலங்களில் மழைநீர் வடிகால் திட்டம் முழுமை பெறும் போது, 74 இடங்களில், இந்த மழைநீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கும் பணி நிறைவு பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

எப்படி அமைகிறது கிணறு?
மழைநீர் சேகரிப்பு கிணறு, 15 அடி ஆழம், 4 அடி விட்டத்தில் அமைக்கப்படும். இந்த கிணறுடன், அருகில் உள்ள மழைநீர் வடிகால்கள் இணைப்பு செய்யப்படும். இந்த கிணறுகள் மணற்பங்கான இடங்களில் அமைக்கப்படுகின்றன. களிமண் உள்ள வரை, 15 அடி ஆழத்திற்கு உறை கிணறு அமைக்கப்படும். அதன்பின், கிணற்றின் நடுப்பகுதியில், 15 அடி ஆழத்திற்கு ஆழ்துளை குழாய் அமைக்கப்படும். கிணறு பகுதியில் ஜல்லி, மணல் கொண்டு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.

எந்தெந்த இடங்களில்?
மழைநீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்க தேர்வான இடங்கள் 74குடிநீர் வாரிய நீர்ப்பிடிப்பு பகுதி 1குடிநீர் வாரியத்திக்கு சொந்தமான இடம் 2மாநகராட்சி பூங்கா 24மாநகராட்சிக்கு சொந்தமான குளம் 19மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகள் 8'அம்மா' உணவக வளாகம் 1அரசு அலுவலகம் 3விளையாட்டு மைதான வளாகம் 3திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலம் 1சுடுகாடு 1தெருக்கள் 11இதுவரை கிணறு அமைக்கும் பணிகள் முடிந்தவை 22
-நமது நிருபர் -

மூலக்கதை