காவல்துறை செயல்பாடு மோசம் : முதல்வருக்கு, கிரண்பேடி கடிதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காவல்துறை செயல்பாடு மோசம் : முதல்வருக்கு, கிரண்பேடி கடிதம்

புதுச்சேரி : புதுவை தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பறவை ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலா பயணிகள் என 18 பேர் அனுமதியின்றி விசைப்படகில் சென்று நடுக்கடலில் சிக்கிக் கொண்டனர். அவர்களை இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்டனர்.

அரசின் அனுமதியின்றி கடலுக்கு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படுமென நாராயணசாமி தெரிவித்தார். இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் பெங்களூர், மும்பை, சேலம், புதுச்சேரியை சேர்ந்த பறவை ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலா பயணிகள் விசைப்படகில் சென்று நடுக்கடலில் சிக்கிக் கொண்டனர். அவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர்.

முதல்கட்ட விசாரணையில் நடுக்கடலுக்கு சென்ற விசைப்படகு சாகச பயணத்துக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட வில்லை. இதற்கான அனுமதியும் முறையாக பெறவில்லை, உபகரணங்களும் வைத்திருக்கவில்லை.

கடந்த கால சம்பவங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின்படி, புதுச்சேரி மரைன் போலீஸ், சிக்மா நுண்ணறிவு பிரிவு, புதுச்சேரி காவல்துறை, உள்துறை, மீன்வளத்துறை, சுற்றுலா துறையில் மோசமான குறைபாடுகள் உள்ளதை சுட்டிக் காட்டுகிறது.

இந்திய கடலோர காவல்படையின் ஆவணங்கள் அடிப்படையில் மரைன் போலீஸ் உள்ளிட்ட அரசின் பிற துறைகள், இவ்விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தவில்லை என்பது தெரிகிறது.

எனவே இவ்விஷயத்தில் அனைத்து துறைகளும் கவனம் செலுத்தினால் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

.

மூலக்கதை