18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் எதிர்த்து வழக்கு : ஐகோர்ட்டில் டெல்லி வக்கீல்கள் கடும் வாதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் எதிர்த்து வழக்கு : ஐகோர்ட்டில் டெல்லி வக்கீல்கள் கடும் வாதம்

சென்னை : 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் மற்றும் சட்டப்பேரவையில் எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் டெல்லி வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டில் காரசாரமான விவாதம் நடத்தினர். பிற்பகல் வரை அனல்  பறந்த விவாதம் நடைபெற்றது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்றக் கோரியும், தமிழக சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கோரியும், ஆளுநரிடம் டிடிவி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் மனு கொடுத்தனர். இதையடுத்து, அவர்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.

இதில் ஒரு எம்எல்ஏ(ஜக்கையன்) எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக மாறிவிட்டார். இந்தநிலையில், அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் எம்எல்ஏ தமிழ்செல்வன் ஆகியோர் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் தினகரனுக்கு ஆதரவாக 20 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஆளுநரிடம் மனு அளித்த 19 எம்எல்ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபால் 2வது சம்மன் பிறப்பித்தார். அதில் எடப்பாடி ஆதரவு நிலையை எடுத்த ஜக்கையன் மட்டும் நேரில் ஆஜராகி, விளக்கம் அளித்தார்.

தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, எடப்பாடி அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மீண்டும் கடிதம் கொடுத்தார். இந்நிலையில், சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட கோரி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


இந்த மனு விசாரணையின்போது, பேரவைத் தலைவரின் நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.   அவர் தாக்கல் செய்த மனுவில், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்துவிட்டு பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி அரசு திட்டமிட்டுள்ளது. எனவே நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, வரும் 20ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்ததுடன் அதுவரை பெரும்பான்மையை நிரூபிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.

மேலும் கவர்னர், சட்டப்பேரவை செயலாளர், சட்டப்பேரவை தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.   இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது, பேரவைத் தலைவர் தனபால்,  திடீரென்று நேற்று முன்தினம் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய உள்ளோம். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி 18 எம்எல்ஏக்களின் சார்பில் மூத்த வக்கீல் பி. ஆர். ராமன் நேற்று நீதிபதி எம். துரைசாமி முன்னிலையில் ஆஜராகி முறையிட்டார்.

இதைகேட்ட நீதிபதி, ‘மனு தாக்கல் செய்யுங்கள் நாளை விசாரணைக்கு எடுத்து கொள்கிறேன்’ என்று மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்தார்.   வெற்றிவேல் உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தாக்கல் செய்துள்ள மனுவில்,  “ நாங்கள் தொடர்ந்து அதிமுகவில்தான் இருக்கிறோம். கட்சிக்கு எதிராக எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை.

முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பதுதான் ஆளுநரிடம் நாங்கள் வைத்த கோரிக்கை. வேறு கட்சிக்கு ஆதரவாக செயல்படவில்லை.

இந்நிலையில், விதிமுறைகளுக்கு முரணாக எங்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். எனவே, பேரவைத் தலைவரின் உத்தரவையும், இது தொடர்பான அரசிதழ் அறிவிப்பையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.



இந்த வழக்கு இன்று நீதிபதி எம். துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வெற்றிவேல் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், சுப்ரீம் கோர்ட் பார்கவுன்சில் தலைவர் துஷ்யந்த் தவே, திமுக சார்பில் கபில் சிபல், அமரேந்திரசரண், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அரசு தரப்பில் அரிமா சுந்தரம், சி. வி. வைத்தியநாதன், ராகேஷ் திரிவேதி ஆகியோர் ஆஜராகினர்.

3 பேர் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் இருந்து மூத்த வக்கீல்கள் வந்து ஆஜராகியதால், விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் வக்கீல்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சட்டப்பேரவை தொடர்பாக இதுவரை 17 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த தீர்ப்புகளை வைத்து 3 தரப்பினரும் கடுமையான, அனல் பறக்கும் விவாதம் நடத்தினர். இந்த விவாதம் பிற்பகல் வரை நடைபெற்றது.

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் கவர்னர் இன்று முக்கிய முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.

.

மூலக்கதை