14 கடலோர மாவட்டங்களில் 48 மணி நேர “சாகர் கவச்” பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
14 கடலோர மாவட்டங்களில் 48 மணி நேர “சாகர் கவச்” பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது

சென்னை : தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் “சாகர் கவச்” என்ற 48 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. இதனால் சென்னையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் மும்பையில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தீவிரவாத தாக்குதலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் கடல் பகுதிகளில் 6 மாதங்களுக்கு ஒருமுறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்திலும் சென்னை உள்பட 14 கடலோர மாவட்டங்களில் இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை துவங்கியது. அதன்படி இன்று காலை 8 மணி துவங்கி மொத்தம் 48 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது.

இந்த பாதுகாப்பு ஒத்திகைக்கு “சாகர் கவச்” (கடல் கவசம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் கடலோர காவல்படை, கடற்படை, கடலோர பாதுகாப்புக்குழுமம், தமிழக போலீசார் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

ஒத்திகையின்போது, போலீசார் தீவிரவாதிகள் போல் உடை அணிந்து தாக்க முயற்சிப்பது போலவும், முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைப்பது போலவும் அவர்களை வீரர்கள் சுற்றி வளைத்து பிடிப்பது போலவும் ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் கடலில் மீன் பிடித்து திரும்பும் மீனவர்களின் படகுகளை கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே கரைக்கு அனுமதிக்கப்படுகிறது. கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படை சார்பில் ரோந்து கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த பாதுகாப்பு ஒத்திகையில் சென்னை மாநகர போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். வடபழனியில் உள்ள வணிக வளாகத்தில் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை துறைமுகம் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   இதனால் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் போலீசார் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.


.

மூலக்கதை