குஜராத்தில் மாஜி முதல்வர் வகேலா தலைமையில் 3 வது அணி

தமிழ் முரசு  தமிழ் முரசு
குஜராத்தில் மாஜி முதல்வர் வகேலா தலைமையில் 3 வது அணி

அகமதாபாத் : குஜராத் மாநிலத்தில் முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சங்கர்சிங் வகேலா தலைமையில் புதிய அணி உருவாகியுள்ளது. இந்த அணி இந்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என வகேலா அறிவித்துள்ளார்.

குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. 5வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அருண்ஜெட்லி உள்ளிட்ட மூத்த மத்திய அமைச்சர்கள் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமுள்ள 182 இடங்களில் 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இலக்கு வைத்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு பறிகொடுத்த ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி களம் இறங்கியுள்ளார்.



இந்த 2 அணிகளுக்கு இடையே இந்த முறை கடும் போட்டி இருக்கும் என கருதப்பட்ட நிலையில் தற்போது காங்கிரசிலிருந்து விலகிய முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா தலைமையில் புதிய அணி உருவாகியுள்ளது. இது குறித்து வகேலா அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: ஜன் விகல்ப் எனும் அமைப்பை சிலர் தொடங்கியுள்ளனர்.

இதற்கு தலைமை ஏற்று பாஜ மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக செயல்படும்படி என்னை கேட்டுக் கொண்டனர். குஜராத் மாநில மக்களில் பெரும்பாலானோர் என்னை முதல்வராக பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

அவர்களுக்கு எனது ஆதரவை அளிப்பது என முடிவு எடுத்துள்ளேன். தேர்தலில் அனைத்து இடங்களிலும் ஜன் விகல்ப் ேபாட்டியிடும்.

பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் முதல்வர் பதவி ஏற்பது குறித்து அப்போது முடிவு செய்வேன். குஜராத்தில் 3 வது அணி வெற்றி பெறாது என பாஜ கூறுகிறது.

டெல்லி, கேரளம், மே. வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 3வது அணி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு சீமான்பாய் பட்டேல் 3 வது அணியை அமைத்து மாநிலத்தில் ஆட்சியை அமைத்தார்.

இவ்வாறு வகேலா கூறினார்.


.

மூலக்கதை