கவலை: விலை சரிவால் வாழை இலை தேக்கம்:நஷ்டத்தை எதிர்நோக்கும் விவசாயிகள்

தினமலர்  தினமலர்

திருப்புவனம்;திருப்புவனம் வட்டாரத்தில் வாழை இலையின் விலையில் சரிவு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இலைகள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரத்தில் கலியாந்துார், வெள்ளக்கரை, அல்லிநகரம், திருப்பாச்சேத்தி, கானுார், மாரநாடு உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் நடைபெறுகிறது. நாட்டு வாழை, ஒட்டு வாழை, ரஸ்தாளி, பச்சை உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் இருந்தாலும் இப்பகுதியில் நாட்டு வாழை, ஒட்டு ரக வாழையே அதிகளவில் பயிரிடப்படுகிறது.
குறைந்த செலவு, பராமரிப்பும் குறைவு, குறைந்த அளவு தண்ணீர் தேவை,நோய் தாக்குதல் குறைவு போன்ற காரணங்களால் ஒட்டு மற்றும் நாட்டு வாழைகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. கடந்த சில வருடங்களாக கடும் வறட்சி நிலவி வருவதால் வாழை பயிரிட பெரும்பாலான விவசாயிகள் முன்வரவில்லை. மோட்டார் பாசன விவசாயிகள் மட்டும் வாழை பயிரிட்டனர். கடந்த ஆவணி மாதம் முகூர்த்த நாட்கள் என்பதால் வாழை இலைகள், வாழை காய்கள், வாழை பழங்கள் உள்ளிட்டவைகளின் விலை அதிகரித்து இருந்ததால் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைத்தது. காலதாமதமாக பயிரிட்ட விவசாயிகள் பலரும் தற்போது போதிய விலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். திருப்பாச்சேத்தி வாழைச் சந்தையில் கடந்த 3 நாட்களாக வாழை இலை கட்டுகள் வியாபாரிகள் வரத்து இன்றி காய்ந்து வருகிறது. விலை சரிவால் பெரும்பாலான விவசாயிகள் வாழை இலை அறுவடை செய்வதை நிறுத்தி விட்டனர். இலை வெட்டு கூலி கூட கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்யாமல் இலைகளை மரத்திலேயே விட்டு விட்டனர்.விவசாயி சோணை கூறியதாவது:ஏக்கருக்கு ஆயிரம் வாழை கன்றுகள் வரை நடவு செய்யலாம், ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம், முகூர்த்த நாட்களை கணக்கிட்டு வாழை பயிரிடுவது வழக்கம், கடும் வறட்சி காரணமாக சற்று தாமதமாக பயிரிட்டோம், தற்போது புரட்டாசி மாதம் என்பதாலும் வாழைக்கு நல்ல விலை கிடைக்கும் ஒட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து விட்டதால் வாழை இலைகளை விரும்புவது இல்லை.
இதனாலேயே விலை சரிவு ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் பேப்பர்கள் உள்ளிட்டவற்றை தடை செய்தாலே போதிய விலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றார். வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: திருப்புவனம் வட்டாரத்தில் 2ஆயிரம் எக்டேரில் வாழை பயிரிடுவது வழக்கம், கடும் வறட்சி காரணமாக தற்போது 300 எக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. விவசாயிகள் பெரும்பாலும் அதிகாரிகளின் ஆலோசனையை கேட்பதில்லை. வாழைக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் யாரும் காப்பீடு செய்வதில்லை என்றார்.

மூலக்கதை