மதுரையில் டெங்கு அறிகுறியுடன்200 பேர்:கேரள எல்லை மாவட்டங்களால் பீதி

தினமலர்  தினமலர்
மதுரையில் டெங்கு அறிகுறியுடன்200 பேர்:கேரள எல்லை மாவட்டங்களால் பீதி

மதுரை:மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலால் 200 பேர் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெறுகின்றனர். கேரளா மாநில எல்லை மாவட்டங்களில் இருந்து பலர் டெங்கு காய்ச்சலுக்கு மதுரையில் சிகிச்சை பெறுகின்றனர்.
அரசு மருத்துவமனை மற்றும் உசிலம்பட்டி, திருமங்கலம், மேலுார் உட்பட 8 அரசு மருத்துவமனைகள், 53 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து காய்ச்சல் பாதிப்புக்கு அதிகம் பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். மழை, வெயில் என மாறும் சீதோஷ்ண நிலையும் ஒரு காரணம். நல்ல நீரில் உருவாகும் ஏடிஸ் வகை கொசுக்களால் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.இம்மாத துவக்கத்தில் இருந்தே தீவிர காய்ச்சல் பாதிப்பிற்கு தினமும் 5 ஆயிரம் பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றனர்.
ஒரு வாரத்திற்கு மேலாக காய்ச்சல், சளி, இருமல் பாதித்த 1200 பேர் டெங்கு அச்சத்தில் 'டெங்கு' சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் டெங்கு பாதிப்பிற்கு மதுரை ஜெய்ஹிந்த்புரம் பர்வீன்பானு மற்றும் மேலுார், பழநி, மானாமதுரை பகுதியை சேர்ந்த 10 பேர் வரை இறந்தனர்.கேரளா மாநில எல்லையில் உள்ள தேனி, கன்னியாகுமரியில் இருந்து டெங்கு அறிகுறி சிகிச்சைக்காக மதுரை வருகின்றனர்.
இவர்களது ரத்த பரிசோதனையில் 'பிளேட்லெட்' அளவு குறைந்து டெங்கு அறிகுறி தென்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுகின்றனர். மதுரை அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் மட்டும் 15 நோயாளிகள் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெறுகின்றனர். அதே போன்று பிற அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 185 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கேரளா எல்லை மாவட்டங்களால் மதுரை பீதியில் உள்ளது. மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன்குமார் கூறியதாவது: மதுரையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது. சீதோஷ்ண நிலை மாற்றமே சளி, இருமலுடன் காய்ச்சல் பரவ காரணம். இக்காய்ச்சல் பாதித்தால் உரிய சிகிச்சை பெறவேண்டும். டெங்கு பரப்பும் கொசுவை ஒழிக்க ஒன்றியத்திற்கு 20 முதல் 25 கொசுஒழிப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு சுகாதார பணிகள் நடக்கின்றன, என்றார்.

மூலக்கதை