ரோஹிங்கியா அனைவரும் தீவிரவாதிகள் அல்ல : மத்திய அரசுக்கு மம்தா பதிலடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரோஹிங்கியா அனைவரும் தீவிரவாதிகள் அல்ல : மத்திய அரசுக்கு மம்தா பதிலடி

கொல்கட்டா : ரோஹிங்கியா விவகாரத்தில் பொது மக்கள் அனைவருமே தீவிரவாதிகள் அல்ல என மத்திய அரசுக்கு மம்தா பதிலடி கொடுத்துள்ளார்.
மியான்மரில் அரசு படைகளால் படுகொலை செய்யப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து உயிருக்கு பயந்து பங்களாதேஷ் எல்லைகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்தியாவில் இருக்கும் சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியாக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.


இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த விளக்கத்தில் ரோஹிங்கியாக்களால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரோஹிங்கியாக்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல.

அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதால் அவர்களை வெளியேற்றுகிறோம் என்று கூறுவது ஏற்புடையதல்ல. அனைத்து பொது மக்களும் தீவிரவாதிகள் அல்ல.

ஒரு சிலர் தீவிரவாதிகளாக இருக்கலாம். தீவிரவாதிகளைத்தான் தீவிரவாதிகளாக கருத வேண்டும்.

பொது மக்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு சமூகத்திலும் சில தீவிரவாதிகளாக இருப்பர்.

நல்லவர்களும் இருப்பர். அந்த ஒரு சிலருக்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் தீவிரவாதிகள் என்று கூறி விட முடியாது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த விவகாரத்தில் வெளியேற்றப்பட வேண்டியவர்கள் குறித்த பட்டியலை அளிக்கும்படி மேற்கு வங்க அரசை மத்திய அரசு கேட்டுள்ளது.

இதை மேற்கு வங்க அரசு ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை