மத்திய குற்றபிரிவு போலீசார் குடகில் முகாம் வேலை வாங்கி தருவதாக பல கோடி மோசடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய குற்றபிரிவு போலீசார் குடகில் முகாம் வேலை வாங்கி தருவதாக பல கோடி மோசடி

சென்னை : தினகரன் ஆதரவாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி. இவர், கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, கடந்த 2015ல் போக்குவரத்து துறையில் டிரைவர், ஓட்டுனர், தொழில் நுட்ப உதவியாளர், மெக்கானிக்  உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டது.   ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இதில் 100க்கும் மேற்பட்டோரிடம் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் செந்தில் பாலாஜி தரப்பு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள் செந்தில் பாலாஜி தரப்பை அணுகியதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர்களுக்கு வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.   கடந்த 2015ல் நீலாங்கரையை சேர்ந்த கோபி உட்பட 40க்கும் மேற்பட்டோர் செந்தில்பாலாஜி மீது 4. 25 கோடி மோசடி புகாரும்,  மற்றொரு தரப்பினர் ரூ. 1. 17 கோடி மோசடி புகாரும் கமிஷனர் அலுவலகத்தில் அளித்தனர். ஆனால், அந்த புகார் மீது நடவடிக்ைக எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.



இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீதான இரண்டு புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 408, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் இரண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு வருமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல முறை அழைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால், விசாரணையில் நேரில் ஆஜராகாமல் ஏமாற்றி வந்தாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 17 எம்எல்ஏக்களுடன் இவர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


இதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் வெங்கடாச்சலம் தலைமையில் தனிப்படை போலீசார் கடந்த சனிக்கிழமை குடகு பகுதிக்கு சென்றுள்ளனர். ஆனால், அந்த நேரத்தில் அவர் விடுதியில் இல்லை.

இது தொடர்பாக எம்எல்ஏக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அங்கிருந்து சென்று விட்டனர்.

நேற்று முன்தினம் எம்எல்ஏக்கள் சென்ற காரை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அந்த காரில் செந்தில் பாலாஜி இல்லாததால் புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜியை கைது செய்வதற்காக குடகு பகுதியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முகாமிட்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறும் போது, 2 மோசடி புகார் தொடர்பாக அவரை விசாரணைக்கு அழைத்தோம்.

ஆனால், அவர்  வரவில்லை. அதன்பிறகு தான் நாங்கள் அவரை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் செந்தில் பாலாஜி செல்போன் டவர் வைத்து அவர் குடகு பகுதியில் இருப்பதை அறிந்தோம். அங்கு அவர் விடுதியில் தங்கியிருப்பதாக தகவல் வந்தது.

இதை தொடர்ந்து விடுதிக்கு சென்றோம். ஆனால், நாங்கள் வருவதை அறிந்த அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

பின்னர் எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர் காரில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அந்த காரை சோதனை நடத்தினோம். அங்கும் அவர் இல்லை.

தொடர்ந்து செல்போன் சிக்னலை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்’ என்றனர்.


.

மூலக்கதை