'கை'வை: மதுரை வைகையில் ஆக்கிரமிப்பாளர்கள் :நேற்று கபடி போட்டி; இன்று வாத்து பண்ணை

தினமலர்  தினமலர்
கைவை: மதுரை வைகையில் ஆக்கிரமிப்பாளர்கள் :நேற்று கபடி போட்டி; இன்று வாத்து பண்ணை

மதுரை:மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் வைகை இன்னும் சில ஆண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் அழியப் போகிறது. அதற்கான வேலைகள் எல்லாம் ஜரூராக நடந்து வருகிறது.ஆரப்பாளையம் மேம்பாலம் அருகே உள்ள வைகை ஆற்றில் ஒருபக்கம் கழிவு நீர் ஓட, மறு பக்கம் கார், டூவீலர், லாரி போன்ற வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கிறது. ஆற்றுக்குள் ரோடு அமைக்கும் அதிகாரம், தைரியத்தை யாருக்கு, யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே, கபடி களமாக இருக்கும் வைகை, எதிர்காலத்தில் கிரிக்கெட் களமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
இந்நிலையில், செல்லுார் அருகே வைகை ஆற்றுக்குள் பிரம்மாண்டமாக கூடாரம் ஒன்று அமைத்துள்ளனர். இது மட்டுமல்ல, ஆட்கள் தங்குவதற்கு வசதியாக இரண்டு சிறிய கூடாரங்களும் உள்ளன. பெரிய கூடாரம் கால்நடைகள், வாத்துக்கள் வளர்க்கும் இடமாக இருக்கலாம் என வைகை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அதற்கு ஏற்ப அந்த கூடாரத்தின் அருகே தேங்கி கிடக்கும் கழிவு நீரில் வாத்துகள் ஜாலியாக நீந்திக் கொண்டிருக்கின்றன.இப்படியே போனால் ஆற்றை கூறு போட்டு வீட்டு மனைகளாக மாற்றிவிடுவார்கள். இதை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. வைகை ஆற்றுக்குள் இருக்கும் இதுபோன்ற ஆக்கிரமிப்பாளர்கள் மீது கை வைக்க கொஞ்சம் இந்த பக்கம் தலையை காட்டுங்களேன் ஆபீசர்ஸ்.

மூலக்கதை