தேனி மாவட்ட தேங்காய்க்கு...கிராக்கி:கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி

தினமலர்  தினமலர்

தேவாரம்;கேரளா, ஆந்திராவில் பெய்யும் தொடர் மழையால் தேனி மாவட்ட தேங்காய்க்கு நல்ல 'கிராக்கி' ஏற்பட்டுள்ளது. வரத்து சரிந்துள்ள நிலையில் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் கம்பம் பள்ளதாக்கு, பெரியகுளம், வருஷநாடு, போடி பகுதியில் 25 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடக்கிறது. இவற்றில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உள்ள மரங்களிலிருந்து இளநீர் மட்டும் வெட்டப்படுகிறது. மற்றவற்றில் இருந்து கொப்பரை தேங்காய் இறக்கப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காயை விட கொள்முதல் 'ஆர்டர்' அதிகமிருப்பதால் விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் ரூ.10க்கும் குறைவாக விற்பனையான தேங்காய், நடப்பு வாரத்தில் ரூ.16க்கும் மேல் வாங்கப்படுகிறது. தென்னை உற்பத்தி சரிந்துள்ள நிலையில், தேங்காய்க்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதிக விலை
கோம்பை மொத்த வியாபாரி எஸ்.பவுன்ராஜ் கூறுகையில், “கடந்த இரண்டாண்டாக மாவட்டத்தில் நிலவிய வறட்சியால் தேங்காய் வரத்து 40 சதவீதம் குறைந்து விட்டது. நிலத்தடி நீர்மட்டம் சரிந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் தென்னை மரங்களை வெட்டி விட்டு, காய்கறி சாகுபடியில் இறங்கியுள்ளனர்.கேரளா, ஆந்திராவில் தொடர்ந்து மழை பெய்வதால் அங்கிருந்து கொப்பரை தேங்காய் வரத்து சரிந்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் விளையும் தேங்காய் வாங்க வெளிமாநில வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர். சில்லரை விற்பனை மார்க்கெட்டிற்கு தேவையான அளவு தேங்காய் வருவதால், அதிக விலைக்கு 'லோக்கலில்' விற்பனை செய்யப்படுகிறது.
பருவட்டு ரக தேங்காய் விவசாயிகளிடமிருந்து ரூ.16 வரை வாங்கப்படுகிறது. கொப்பரைக்கு அனுப்ப வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. வெளி மாநில மொத்த வியாபாரிகளுடன் ஒப்பந்தம் செய்தவர்கள் மட்டும் உரித்தகாய் அனுப்புகின்றனர். கேரளா, ஆந்திராவிலிருந்து காய் வரத்து துவங்கியவுடன் விலை குறையும் வாய்ப்புள்ளது,” என்றார்.

மூலக்கதை