சென்னை எல்லைச்சாலை திட்டத்திற்கு அனுமதி... கிட்டுமா? நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் டில்லி பயணம்

தினமலர்  தினமலர்
சென்னை எல்லைச்சாலை திட்டத்திற்கு அனுமதி... கிட்டுமா? நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் டில்லி பயணம்

சென்னை எல்லைச்சாலை திட்டத்திற்கு அனுமதி பெறுவதற்காக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், டில்லி செல்ல உள்ளனர்.

சென்னைக்குள் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஏற்கனவே, கிண்டி - மணலி இடையே, நுாறடிச்சாலை; இரும்புலியூர் - புழல் இடையே, சென்னை பை- - பாஸ் சாலை அமைக்கப்பட்டு உள்ளன.

நெரிசலுக்கு தீர்வு:


இதை தொடர்ந்து, வண்ட லுார் - மீஞ்சூர் இடையே, சென்னை வெளிவட்டச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், மாமல்லபுரம் - எண்ணுார் துறைமுகம் இடையே, 133 கி.மீ.,க்கு, சென்னை எல்லைச்சாலை திட்டம் வகுக்கப்பட்டுஉள்ளது.

சிங்கபெருமாள்கோவில், ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர், தச்சூர், எண்ணுார், காட்டுப்பள்ளி தனியார் கப்பல் கட்டும் தளம் ஆகியவற்றின் வழியாக, இச்சாலை அமைய உள்ளது. இதற்கு, 12 ஆயிரத்து, 301 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

மாநில அரசு மூலம், இந்த நிதியை ஒதுக்க முடியாததால், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மூலம், இப்பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு அனுமதி பெற்ற பின்னரே, ஜப்பான் நிறுவனத்திடம் நிதி பெற முடியும். எனவே, மத்திய அரசின் அனுமதி பெறுவதற்கான முயற்சிகளை நெடுஞ்சாலைத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியதாவது: சென்னை எல்லைச்சாலைக்கு, 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இது, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நம்பிக்கை:


இச்சாலை, எண்ணுார் துறைமுகத்தில் துவங்கி, மாமல்லபுரம் பூஞ்சேரி சந்திப்பில் முடியும். இதன் ஒரு பகுதியாக, மீஞ்சூர் நகரத்திற்கு புறவழிச்சாலையும் அமைக்கப்படும். ஆனால் இதை, மத்திய அரசு இன்னும் பரிசீலிக்கவில்லை.தற்போது, மத்திய, மாநில அரசுகள் இடையே நல்லுறவு நீடிப்பதால், அதை பயன்படுத்தி இத்திட்டத்திற்கு அனுமதி பெற முயற்சிக்கப்படுகிறது. இதற்காக, நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் குழு டில்லி செல்லவுள்ளது. இம்முறை, மத்திய அரசு அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

மூலக்கதை