ஏலத்தில் விவசாயிகள் அடமான நகைகள் நெருக்கடியால் தவிப்பு : மத்தியரசின் உத்தரவை மதிக்காத வங்கிகள்

தினமலர்  தினமலர்

வத்திராயிருப்பு;வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிலையறிந்து அவர்களின் வங்கிக்கடன்களை நீண்டகால கடனாக மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டும், அதை வங்கிகள் பொருட்படுத்தாமல் அடமானம் வைத்துள்ள விவசாயிகளின் நகைகளை ஏலம் விட்டு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன.
மாவட்டத்தில் பருவ மழை கடந்த 2 ஆண்டு களாக சரிவர பெய்யவில்லை. அவ்வப்போது துாறல் பெய்து ஏமாற்றியதால் அனைத்து பகுதி களிலும் கடும் வறட்சி நிலவுகிறது. அவ்வப்போது பெய்த மழையை நம்பி நெல்,மக்காச்சோளம், தானியப்பயிர்களை விதைத்தவர்கள் யாரும் அதை மீட்க முடியவில்லை. நீரின்றி தாங்களது பயிர்களை கருகவிட நேர்ந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 முறை விவசாயிகள் ஏமாற்றியது பருவமழை. முதலில் வடகிழக்கு பருவமழை, அடுத்து தென்மேற்கு பருவமழையும் அடுத்தடுத்து ஏமாற்றியதால் விவசாயிகள் பெரும் இழப்புகளுக்குஆளாயினர். மேற்கொண்டு விவசாயம் செய்வதற்காக வங்கிகளில் நகை, உடைமைகளை அடமானம் வைத்து கடன் பெற்று விவசாயம் செய்தனர். ஆனாலும் கடன்களிலிருந்து மீளமுடியவில்லை.
நிவாரணக்குழு
வறட்சியால் மாநிலம் முழுவதும் விவசாயிகள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் அடங்கிய வறட்சி நிவாரண குழுக்களைஏற்படுத்தியது. அக்குழுவினர் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு அரசுக்குஅறிக்கை சமர்ப்பித்தனர். கடும் பாதிப்புகள் இருந்ததால் அனைவருக்கும் ஏக்கருக்கு 5 ஆயிரம் வீதம் வறட்சி நிவாரணமாக அரசுவழங்கியது.
இதற்கான கணக்கெடுப்பின் மூலம் வறட்சி உறுதி செய்யப்பட்டதாலும், எவ்வளவு மகசூல் பாதிக்கப்பட்டது, இதில் எத்தனை விவசாயிகள் பாதிக்கப்பட்டனர் என்ற விபரம் புள்ளி விபரத்துடன் தெரியவந்ததாலும் கடந்த சில மாதங்களுக்குமுன்பே மத்திய அரசு விவசாயிகளின் வங்கி கடன்கள் மீதான வட்டியை ஒத்திவைக்க உத்தரவிட்டது.வட்டிக்கு மேல் வட்டிஅத்துடன் அந்த உத்தரவு நாள்முதல் கடன்களை நீண்டகாலக்கடன்களாக மாற்றவும், வறட்சிகாலம் முடிந்து மீண்டும் விவசாயம் செய்யத்துவங்கும் போது அக்கடன்களை வசூலித்துக் கொள்ளவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் விவசாயத்திற்காகநிலம், வீடுகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள், பட்டா, சிட்டா அடங்கல் கொடுத்து நகைகளை அடமானம் வைத்துகடன் பெற்றவர்களுக்கு வட்டி நிறுத்தி வைக்கப்படவேண்டும். அக்கடன்களை நீண்டகால கடன்களாக மாற்றம் செய்யப் பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வங்கிகள் அரசின் உத்தரவை பின்பற்றவில்லை.விவசாயிகளின் கடன்களுக்கு வட்டிமேல் வட்டி போட்டு வருகின்றன. அத்துடன் நகைகளை ஏலம் விடுவதற்கு அறிவிப்பு செய்துஅதன்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திருப்பப்படாத நகைகளை ஏலம் விட்டு வருகின்றன.
அடிக்கடி நோட்டீஸ்இதனால் கடந்த 4 மாதத்தில் ஏராளமான விவசாயிகள் தாங்களது நகைகளை வட்டிக்காக பறிகொடுத்துள்ளனர். ஏற்கனவேவாழ்வாதாரம் இன்றி தவித்துவருகின்றனர். தாங்களது அன்றாட குடும்பச் செலவுகளுக்கு கூட வழியின்றி கூலிவேலைக்குசென்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் நகைகளும் ஏலம் விடப்பட்டதால் அடுத்து அவசரத்திற்கு அடமானம் வைத்துவிவசாயம் செய்வதற்கு கூட வழியின்றி எதிர்காலம் சூன்யமாகி நின்கின்றனர். உதாரணமாக வத்திராயிருப்பில் பாண்டியன்கிராமவங்கி, ஸ்டேட் பாங்க் ஆகியவற்றில் நகைகள் அடமானம் வைத்த விவசாயிகளுக்கு வங்கி நிர்வாகங்கள் அடிக்கடிநோட்டீஸ் அனுப்பி நெருக்கடி கொடுப்பதுடன் அவர்களின் நகைகளை ஏலத்தில் விட்டு விடுகின்றன. இதனால் அங்கு நகைகள்அடமானம் வைத்த விவசாயிகள் தனியார் அடமானக் கடைக்கார்களிடம் சென்று அதிக வட்டிக்கு பணம் வாங்கி திருப்பவேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.
தேவை நடவடிக்கைவத்திராயிருப்பு விவசாயி கோவிந்தன் கூறுகையில் ,''ஏற்கனவே பலமுறை இழப்புகளுக்கு ஆளாகி குடும்பச் செலவுகளுக்கேவழியின்றி தவிக்கும் விவசாயிகளிடம் போய் நகைக்கடனை கட்டுங்கள் என்றால் யாரால் கட்ட முடியும். இதுபோன்றகுறுகியகாலக் கடன்களை வறட்சிநிலை போகும் வரை நீண்டகாலக்கடன்களாக மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டும் வங்கிநிர்வாகங்கள் மதிக்கவில்லை. தொடர்ந்து நகைகளை ஏலம் விட்டு வருகின்றன. அடுத்தடுத்து விவசாயிகளுக்குநெருக்கடி கொடுத்து வருகின்றன. அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு விவசாயிகளின் நகைகளை ஏலம் விட்டவங்கி மேலாளர்கள் மீதுஅரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

மூலக்கதை