கிராமங்களில் காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் பாதிப்பு:அதிகாரிகள் அலட்சியத்தினால் மக்கள் அலைக்கழிப்பு

தினமலர்  தினமலர்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் கிராமப்புறப்பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படவில்லை. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கிராமப்புற மக்கள் தண்ணீருக்காக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சி, ஏழு பேரூராட்சி, 459 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு குடி நீர் வினியோகம் 90 சதவீதம் காவிரி கூட்டு குடி நீர் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போனதால், கிராம மக்கள் குடி நீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். காவிரி கூட்டு குடிநீர் திருச்சி, முத்தரசநல்லுார் பகுதியில் காவிரி ஆற்றில் உறைகிணறு அமைத்து அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பம்பிங் செய்யப்பட்டு வந்தது. தினசரி 48 மில்லியன் லட்சம் லிட்டர் பம்பிங் செய்யப்பட வேண்டும். வறட்சியால் பாதிப்பு: காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனதால், காவிரி கூட்டு குடி நீர் திட்டத்தில் பம்பிங் செய்யப்படும் தண்ணீரின் அளவு குறைந்திருந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் குடி நீர் பஞ்சம் தலை விரித்தாடியது. நீர் நிலைகளிலும், கிணறுகளிலும் ஊற்றுக்கள் வற்றின. அதிக ஆழத்தில் சென்றால், உவர்ப்பு நீரே கிடைத்தது. மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சீராகியது: கடந்த மாதம் முதல் காவிரி ஆற்றில் கூடுதல் நீர் திறக்கப்பட்டு தற்போது தினசரி பம்பிங் செய்யப்படும் அளவான 48 மில்லியன் லட்சம் லிட்டர் 95 சதவீதம் எடுக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வரத்து சீரான பின்னர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடி நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பாதிப்பு: கிராமங்களில் தற்போது இன்றுவரை காவிரி கூட்டு குடி நீர் வழங்கப்படாமல் உள்ளது. பல கிராமங்களில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டும், குடி நீர் வினியோக பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாக இருந்து வருகிறது. ஆண்டுக்கணக்கில் காவிரி கூட்டு குடி நீர் திட்டம் மூலம் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேவையான குடி நீர் பம்பிங் செய்யப்பட்டும், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக குடி நீர் வினியோகம் இல்லாத நிலை உள்ளது.
வீணடிப்பு: காவிரி கூட்டு குடி நீர் திட்ட பகிர்மான குழாய்கள் பல இடங்களில் உடைந்து, குடி நீர் வீணாகிறது. அதனை முறையாக பராமரிப்பு செய்யாமல், அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், குடி நீர் வீணடிக்கப்படுகிறது. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிராமப்புறங்களில் காவிரி கூட்டு குடி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக வினியோகம் செய்யப்படுவதை உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

மூலக்கதை