நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.3,500 கோடி செலவில் 49 கேன்சர் மையங்கள்: மத்திய அரசு திட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.3,500 கோடி செலவில் 49 கேன்சர் மையங்கள்: மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி : நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ரூ. 3 ஆயிரத்து 500 கோடி செலவில் 49 கேன்சர் மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் புதிதாக 10 லட்சம் பேருக்கு கேன்சர் நோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் நோய் முற்றிய காரணத்தால் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் இறந்து வருகிறார்கள்.

அடுத்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என இந்திய மெடிக்கல் ரிசர்ச் கவுன்சில் எச்சரித்துள்ளது. 2020ம் ஆண்டில் சுமார் 9 லட்சம் கேன்சர் நோய்க்கு உயிரிழப்பார்கள் என அபாயசங்கு எழுப்பியுள்ளது.

இந்தியாவில் தற்போது 31 கேன்சர் மையங்கள் உள்ளன. இவைகள் பெரும்பாலும் பெரிய நகரங்களில் தான் உள்ளன.



தொலை தூரங்களில் வசிப்பவர்கள் கேன்சர் சிகிச்சை பெற பெரிய நகரங்களை நாட வேண்டியிருப்பதால் போக்குவரத்து, தங்கும் வசதி போன்வற்றிற்கு அதிக செலவு  செய்ய வேண்டியுள்ளது. தற்போதுள்ள கேன்சர் மையங்களில் சுமார் 600 ரேடியோ தெரபி மெஷின்கள் உள்ளன.

ஆனால் உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி இந்தியாவில் 1200 ரேடியோ தெரபி மெஷின்கள் இருக்க வேண்டும். கிராமப்புறங்கள் மற்றும் சிறுடவுன்களில் உள்ள கேன்சர் நோயாளிகளின் தேவைக்காக மாவட்ட தலைநகரங்களிலும் கேன்சர் மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 3500 கோடி செலவில் 49 கேன்சர் மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது ெதாடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாக்கியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெறும் உயர்மட்டக்குழு கூட்டத்தில் இந்த திட்ட அறிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

தேசிய கேன்சர் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் இந்த புதிய மையங்கள் அமைக்கப்படவிருக்கிறது.

.

மூலக்கதை