ஐக்கிய ஜனதா தள தலைவர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் நீக்கம் : சரத்யாதவ் அணி நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐக்கிய ஜனதா தள தலைவர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் நீக்கம் : சரத்யாதவ் அணி நடவடிக்கை

பாட்னா : பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் இரண்டாக உடைந்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை நீக்கி சரத்யாதவ் உத்தரவிட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள  கூட்டணியில் இருந்து விலகி, பா. ஜனதா கூட்டணியில் சேர்ந்துள்ளதால் முன்னாள் தலைவர் சரத்யாதவ் தலைமையில் கட்சியில் பிளவு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து இரு தரப்பிலும் பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். சரத்யாதவிடமிருந்து கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன.

ஆனால்  அவரது எம்பி பதவி இன்னும் பறிக்கப்படவில்லை.

கட்சியின் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் சரத்யாதவ் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் போதுமான ஆவணங்கள் இல்லை எனக்கூறி அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இந்நிலையில் சரத்யாதவ் தலைமையிலான கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது.

இதில் நிதிஷ்குமார் கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும், தலைவராக அவர் எடுத்த முடிவுகள் அனைத்தும் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது. கட்சியின் புதிய தலைவராக குஜராத் மாநில கட்சி தலைவர் சோடுபாய் வாசவா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க கோரி தேர்தல் கமிஷனிடம் மீண்டும் மனு தாக்கல் செய்வது எனவும் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

.

மூலக்கதை