மேற்கு வங்கத்தில் விஜயதசமி நாளில் ஆயுதங்களை வைத்து ஊர்வலம் நடத்த கூடாது: பஜ்ரங் தள், விஎச்பிக்கு மம்தா கடும் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மேற்கு வங்கத்தில் விஜயதசமி நாளில் ஆயுதங்களை வைத்து ஊர்வலம் நடத்த கூடாது: பஜ்ரங் தள், விஎச்பிக்கு மம்தா கடும் எச்சரிக்கை

கொல்கட்டா: ஆயுத பூஜை தினத்தின் போதே மொகரம் பண்டிகையும் ஒன்றாக வருவதால் அன்றைய தினம் ஆயுதங்களை வைத்து ஊர்வலம் நடத்த கூடாது என பஜ்ரங் தள், விஎச்பிக்கு முதல்வர் மம்தா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் நவராத்திரியின் இறுதி நாளான விஜய தசமியின் போது துர்கா சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் விடுவது வழக்கம். இந்த ஆண்டு விஜயதசமி தினத்தன்று மொகரம் பண்டிகையும் வருகிறது.

எனவே சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் துர்கா சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கட்டா ஐகோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கில் மும்பையில் வினாயகர் ஊர்வலத்தின் போது மகாராஷ்டிரா போலீசார் செயல்பட்டதை போல மேற்கு வங்க போலீசார் செயல்பட வேண்டும்.

சமூக அமைதியை காக்க வேண்டும் என அறிவுரை வழங்கியது.

இந்த சூழலில் துர்கா பூஜையில் சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மொகரம் பண்டிகையும் அன்றைய தினம் வருவதால் தான் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தேன்.

இரு சமூகத்தினரின் நலனையும் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மொகரம் என்பது பண்டிகையல்ல.

அது பாரம்பரிய இறப்பு சடங்கு. எனவே விஜயதசமியின் போது சிலைகளை மற்றும் ஆயுதங்களை ஊர்வலமாக எடுத்து செல்வதன் மூலம் சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

ஆனால் சிலர் இதை அரசியலாக்க முயற்சி செய்து வருகின்றனர்.

விஎச்பி, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் அன்றைய தினம் 300 இடங்களில் ஆயுத பூஜை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பொது இடங்களில் ஆயுதங்களை  வைத்து வழிபாடு நடத்துவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். ஒருசிலர் மும்பை போலீசாருடன், கொல்கட்டா போலீசாரை ஒப்பிட்டு பேசுகின்றனர்.

ஆனால் நான் கேட்கிறேன், வினாயகர் சதுர்த்தியும், மொகரமும் ஒன்றாக வந்திருந்தால் அவர்கள் என்ன செய்திருப்பார்கள்? நான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் அனைத்து தரப்பு மக்களின் நலனும் மிகவும் முக்கியம். ஆயுதங்களை வைத்து ஊர்வலம் நடத்துவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

அதுபோன்ற முயற்சியில் எந்த அமைப்புகள் ஈடுபட்டாலும் அதை ஏற்க முடியாது.

பஜ்ரங் தள், விஎச்பி போன்றவை வெறுப்பு அரசியலை பிரசாரம் செய்து மக்களை பிளவுபடுத்த முயற்சி செய்து வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான செயல் என்பதை அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

விஜயதசமி, துர்கா பூஜையின் போது அமைதி நிலவ அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை